Ind vs Aus, World Cup 2019: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! டெத் ஓவர்களில் மிரட்டிய பும்ரா, புவி!

Ind vs Aus, World Cup 2019
Ind vs Aus, World Cup 2019

உலகக் கோப்பை 2019 தொடரில், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூன்.9) நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்ய, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், தவான் களமிறங்கினர். மிக நேர்த்தியாக பந்துகளை தேர்வு செய்து ஆடிய இந்த ஜோடி, ஆஸ்திரேலிய சீம் பவுலர்ஸ்களுக்கு கடும் சவால் அளித்தது.

குறிப்பாக, ரோஹித் ஷர்மா வழக்கத்தை விட கள்ள மௌனம் சாதிக்க, தவான் அவ்வப்போது கியரை மாற்றி ஆடி வந்தார். பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்த பிறகு, நான்காவது கியருக்கு மாறிய தவான், ஆஸி., ஃபீல்டர்களை அக்ராஸ் தி கிரவுண்ட் ஓட விட்டார்.

பிறகு, மெல்ல அரைசதம் அடித்த ரோஹித் 57 பந்துகளில் கேட்ச் ஆக, கேப்டன் விராட் கோலியுடன் அடுத்த மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தார் தவான்.

அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை குஷிப்படுத்திய தவான், 109 பந்துகளில் 117 ரன்கள் விளாசி அவுட்டானார்.

இறுதியில், கோலி 82*, ஹர்திக் பாண்ட்யா 48, தோனி 27 என்று கணிசமாக பங்களிக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸி., ஓப்பனர்ஸ் வார்னர் – ஃபின்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்க்க, வார்னர் 56 ரன்களும், ஸ்மித் 69 ரன்களும் எடுத்து கேட்ச் ஆனார்கள்.

பிறகு கவாஜா 42, அலெக்ஸ் கேரே 55 ரன்கள் எடுத்தாலும், ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன்கள் மட்டும் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

புவனேஷ், புவி தலா 3 விக்கெட்டுகளும், சாஹல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

உண்மையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கும் இந்திய அணியின் வெற்றி அவ்வளவு சாதாரணமானது அல்ல. உலகக் கோப்பை எனும் உச்சக்கட்ட பிரஷர் மிகுந்த தொடரில், அதுவும் இங்கிலாந்து ஆடுகளத்தில், ஆஸ்திரேலியாவின் அதி பயங்கரமான ஃபேஸ் பவுலிங் அட்டாக்கை எதிர்த்து 352 ரன்கள் குவித்து, பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சில் அதை டிஃபன்ஸ் செய்து வெற்றிப் பெற்றிருப்பது என்பது, வீரர்களை முத்தமிட வேண்டிய தருணமாகும்.