உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு துண்டு போட்டாச்சு! இந்தியாவுக்கு சாதகமாக வீசும் காற்று

Ind vs SL, Ind vs NZ World cup 2019 Semi Final
Ind vs SL, Ind vs NZ World cup 2019 Semi Final

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேற இப்போதே பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் தொடங்கிய போது, பெரியளவு சுவாரஸ்யங்கள், திருப்பங்கள் ஏதுமின்றி நகர்ந்தது. ஆனால், ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளை முடித்த பிறகே, தொடரில் பரபரப்பு ஏற்பட்டது. அதிலும், கடந்த இரு வாரங்களில் நடைபெற்ற அனைத்து போட்டிகளும், தொடரில் கலந்து கொண்ட ஒவ்வொரு அணிகளின் தலையெழுத்தையும் மாற்றி மாற்றி எழுதிக் கொண்டிருந்ததால், ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக அமைந்தது. இந்நிலையில், நேற்றோடு இரண்டு ஆட்டங்களோடு உலகக் கோப்பை லீக் போட்டிகள் முற்றுப் பெற்றுள்ளன.

இதில், முதலில் விளையாடிய இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்தது. இலங்கை தனது முதல் நான்கு விக்கெட்டுகளை 55 ரன்களுக்குள் இழந்துவிட்ட போதிலும், ஏஞ்சலோ மாத்திவ்ஸ் மற்றும் திரிமானே ஆகியோர் ஐந்தாவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் திரட்டினர். திரிமானே 53 ரன்களில் அவுட்டானாலும், இறுதி வரை களத்தில் போராடிய மாத்திவ்ஸ் 128 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் ரோஹித் – லோகேஷ் ராகுல் இணை சீரான இன்னிங்சை வெளிப்படுத்தியது. கடந்த சில போட்டிகளில் அச்சுறுத்திய மலிங்காவின் யார்க்கர்கள், நேற்று இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாமல் விழி பிதுங்கியது. மலிங்கா என்ற ஒருவர் இருக்காரா என்று கேள்விக் கேட்கும் அளவுக்கு ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்தார்.

பிறகு நிதானத்தில் இருந்து அதிரடிக்கு மாறிய ரோஹித் ஷர்மா, நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன மூலம், ஒரே உலகக் கோப்பையில் 5 அதிக சதங்கள் அடித்த முதல் வீரர் எனும் உலக சாதனையை படைத்தார். தவிர, இத்தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலிலும் சகிப் அல் ஹசனை(606) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.

மகத்தான சாதனைகளை படைத்த ரோஹித், 94 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, லோகேஷ் ராகுல் தனது முதல் உலகக் கோப்பை சதத்தையும், இரண்டாவது ஒருநாள் சதத்தையும் நிறைவு செய்தார். 118 பந்துகளில் 111 ரன்கள் சேர்த்து ராகுல் அவுட்டாக, இந்திய அணி 43.3வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றிப் பெற்றது.

அதேசமயம், நேற்று நடந்த மற்றொரு போட்டியில் தென்னப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த தென்.,ஆ 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. கேப்டன் டு பிளசிஸ் 100 ரன்கள் அடித்தார். பிறகு சேஸிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 49.5வது ஓவரில் 315 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 10 ரன்களில் தோல்வியைத் தழுவியது. டேவிட் வார்னர் 122 ரன்கள் எடுத்தார்.

உலகக் கோப்பையின் கடைசி நாளில் மட்டும் மொத்தம் நான்கு சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேற, ஆஸ்திரேலியா 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது. இதைத் தொடர்ந்து, அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்தையும், ஆஸ்திரேலியா – இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது.

அரையிருதியைப் பொறுத்தவரை, நியூசிலாந்தை இந்தியா சந்திப்பது சாதகமாக அம்சமாகவே பார்க்கப்படுகிறது. பயிற்சிப் போட்டியில், நியூசிலாந்திடம் இந்தியா தோற்றிருந்தாலும், லீக் போட்டிகளில் இங்கிலாந்தை தவிர, மற்ற அனைத்து அணிகளிடமும் இந்தியா வெற்றிப் பெற்றிருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால், அந்த சவாலை ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. இருப்பினும், தொடரில் சிறிய அணிகளையும், இரண்டாம் கட்ட அணிகளையும் வீழ்த்திய நியூசிலாந்து, அதன் பிறகு பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்வதில் தடுமாறியது.

அந்த அணியின் ஓப்பனிங் மற்றும் பின் கள வரிசை என்பது மிகவும் பலவீனமாக இருப்பதால், கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் எனும் இரு பேட்ஸ்மேன்களையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பந்துவீச்சு ஓகே ரகம் என்றாலும், இப்போது இந்தியா இருக்கும் ஃபார்மை பார்க்கும் பொழுது, நிச்சயம் அதனை திறம்பட சமாளித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணியைப் பொறுத்தவரை ரோஹித் ஷர்மாவின் அபாரமான பேட்டிங், லோகேஷ் ராகுல் உடனான ஓப்பனிங் கட்டமைப்பு, விராட் கோலியின் உறுதியான அரைசதம், ஆட்டத்தின் நிலையைப் பொறுத்த தோனியின் பேட்டிங் வியூகம், ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி என்று ஓரளவுக்கு நிலைத் தன்மையோடு உள்ளது. பவுலிங்கில், பும்ரா அசுர பலம். டெத் ஓவர்களில் அவரது பவுலிங், நியூஸி., வீரர்களை நிச்சயம் நிலை குலைய வைக்கும். ஷமி, புவனேஷ் என வேகப்பந்துவீச்சில் இந்தியா ஒளிர்ந்தாலும், இந்தியாவின் ஒரிஜினல் பலமான சுழற்பந்து வீச்சில் தடுமாறுவதே பெரிய குறையாக உள்ளது. குல்தீப், சாஹால் ஆகிய இருவரும் இந்த உலகக் கோப்பையில் திணறிக் கொண்டு தான் இருக்கின்றனர். இருப்பினும், கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி அந்த குறையை மற்ற அம்சங்களை வைத்து சமாளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆகையால், அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை தங்கு தடையின்றி வீழ்த்தும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.