ரன் ரேட்டை உயர்த்தியது இந்தியா… வெஸ்ட் இண்டீஸ் மெகா தோல்வி

Ind vs wi score updates
Ind vs wi score updates

நேற்றைய போட்டியை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், மேற்கு இந்திய தீவுகள் அணியை வைத்து, இந்திய அணி தனது ரன் ரேட்டை உயர்த்தி இருக்கிறது என்று நாம் சொல்லலாம்.

மான்செஸ்டர் மைதானத்தில் இந்திய அணி டாஸ் வென்ற போது, நிபுணர்கள் பெரும்பாலானோர் சொன்ன கருத்துகள், ‘இந்தியா 350 ரன்களுக்கும் மேல் குவிக்கலாம்’ என்று. டாஸ் தோற்ற எதிரணி கேப்டன் ஹோல்டரும், ‘நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பேட்டிங் செய்திருப்போம்’ என்றே தெரிவிக்க, நிச்சயம் ரன்கள் திருவிழா என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், நடந்தது எல்லாம் தலை கீழ். இந்திய அணி சச்சின், கங்குலியின் தொடக்க காலத்திற்கு சென்றுவிட்டதோ என்று இப்போதெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. சச்சினும், கங்குலியும் மூச்சைப் போட்டு சதம் அடித்தும் இந்திய அணி 273 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும். ஏனெனில், அவ்வளவு மோசமான நடுவரிசையும், பின் நடுவரிசையும் கொண்ட அணியாக இந்தியா இருக்கும். அவர்கள் இருவரும் கஷடப்பட்டு அடித்ததை, கேரி கிறிஸ்டன் தனி ஆளாக 144 ரன்கள் அடித்து, மேட்சை விரைவில் முடித்து விடுவார்.

அப்படிப்பட்ட ஒரு இந்திய அணியின் காலத்திற்கு இந்தியா சென்றுவிட்டதா? என்றே தோன்றுகிறது. நேற்றையப் போட்டியில், ஒரு சர்ச்சையான அவுட்டால் பலியாக்கப்பட்ட ரோஹித், 18 ரன்களில் வெளியேற, வழக்கம் போல் லோகேஷ் ராகுல் மிக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிறகு, ஹோல்டரின் அற்புதமான இன் ஸ்விங் பந்தில், 48 ரன்களில் லோகேஷ் ராகுல் போல்டானார். அவர் அவுட்டான போது, இந்திய அணியின் ஸ்கோர் 20.4 ஓவரில், 98-2.

அதன்பின் களமிறங்கிய விஜய் ஷங்கர் இம்முறையும் தேர்வுக் குழுவை ஏமாற்றி, 14 ரன்களில் ரோச் பந்துவீச்சில் கீப்பர் கேட்ச் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய கேதர் ஜாதவ் 7 ரன்களில் அவுட்டாக, இந்திய அணியின் நடு வரிசை பலவீனம், மீண்டும் வெட்டவெளிச்சமானது.

பிறகு கோலியுடன் கூட்டணி அமைத்த தோனி, வழக்கம் போலவே மிக பொறுமையான இன்னிங்சை வெளிப்படுத்தினார். ஒருக்கட்டத்தில், 72 ரன்களில் கோலி அவுட்டாக, தோனி – பாண்டியா இணை பொறுப்பை ஏற்றுக் கொண்டது. பாண்டியா 46 ரன்களில் காட்ரல் ஓவரில் வெளியேற, கடைசி வரை களத்தில் நின்ற தோனி, 61 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். இதில், கடைசி ஓவரில் மட்டும் அவர் அடித்த ரன்கள் 16. இதனால், இந்திய அணி 50 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 34.2வது ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் முகமது ஷமி, 6.2 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

6 ஓவர்கள் வீசிய பும்ரா, 9 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சாஹால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.

இதன் மூலம், ஆறாவது போட்டியில் ஆடிய இந்திய அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து, 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. அரையிறுதிக்கு முன்னேற, இந்தியாவுக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை.

அதேசமயம், 7 போட்டிகளில் ஆடிய வெஸ்ட் இண்டீசுக்கு இது ஐந்தாவது தோல்வியாகும். அந்த அணி ஏற்கனவே உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.