7வது முறையாக உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

Ind vs Pak, world cup 2019
Ind vs Pak, world cup 2019

உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை ஒருபோதும் பாகிஸ்தான் அணி வென்றது கிடையாது என்கிற சரித்திரம் மீண்டும் நிஜமாகியது. பாகிஸ்தானை 7-வது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் வென்று சரித்திரம் படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. ரோகித் சர்மாவின் அபார சதமும், இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ஹர்திக் ஆகியோரின் பந்து வீச்சும் இதற்கு கை கொடுத்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று (ஜூன்.16) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்ஃபரஸ் அஹ்மது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதின.

ஏற்கனவே மூன்று போட்டிகளில் களம் கண்டுள்ள இந்திய அணி, இரண்டில் வெற்றிப் பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

பாகிஸ்தான் இதற்கு முன்பு 4 போட்டிகளில் ஆடி, இரண்டு தோல்வியும், ஒரு வெற்றியும் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 3 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

இந்திய அணி முதலில் பேட் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா அபாரமாக ஆடி, சதம் அடித்தார். அவர், 113 பந்துகளில் 140 ரன்கள் விளாசினார். லோகேஷ் ராகுல் 57 ரன்களும், கேப்டன் விராட் கோலி 77 ரன்களும் எடுத்தனர். பிறகு, களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் சிறப்பாக பேட் செய்தாலும், மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் ஆகியோர் பந்து வீச்சில் சரிந்தது. ஃபக்கர் சமான் 62 ரன்களும், பாபர் அசம் 48 ரன்களும் எடுத்தனர்.

இடையில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால், 40 ஓவர்களில் 320 ரன்கள் என பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் மழைக்கு முன்பாகவே 6 விக்கெட்டுகளை பறி கொடுத்த பாகிஸ்தான், அதில் இருந்து மீள முடியவில்லை. 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

புவனேஷ்வர் குமார் தசைப் பிடிப்பு காரணமாக பாதியில் வெளியேற நேர்ந்தாலும் இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.