தடுமாறிய இந்திய அணியை தூக்கி நிறுத்திய ரோஹித் மற்றும் ரஹானே!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முன்னதாக டாஸ் போடும் போது, தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூபிளேசிஸுக்கு பதிலாக அந்த அணியின் வீரர் பவுமா களத்திற்கு வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மற்றொரு நபரை களமிறக்கினால் டாசில் வெற்றி பெறலாம் என எண்ணிய தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டூபெளசிஸ் எண்ணம் பலிக்கவில்லை.

இந்த போட்டியில் நதீம் என்ற சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக மயாங்க் அகர்வாலும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபடா பந்துவீச்சில் மயாங்க் அகர்வால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய புஜாராவும் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். சிறிதுநேரம் தாக்குப்பிடித்த நிலையில், 12 ரன்களில் ஆட்டமிழந்து விராட் கோலி பெவிலியன் திரும்பினார்.

இதனால் 40 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. அதன்பின் தொடக்க வீரர் ரோகித் சர்மாவுடன் துணை கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்தார். விக்கெட் சரிவை தடுக்கும் வகையில் இருவரும் பொறுப்புடன் விளையாடினர். இதன் காரணமாக அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சதம் அடித்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய துணை கேப்டன் ரஹானே அரை சதம் கடந்தார்.

இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 224 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளது. துணை கேப்டன் ரஹானே 83 ரன்களுடனும், ரோகித் சர்மா 117 ரன்கள் களத்தில் உள்ளனர்.

போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆட்டம் 58 ஓவர் முடிவுற்ற நிலையில் நிறுத்தப்பட்டது.

You cannot copy content of this page