தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி..!!

India Wins 2nd T20 match against S.Africa in Mohali

மொகாலியில் நடைபெற்ற இந்தியா vs தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி.

டாஸ் வென்ற இந்தியா தென் ஆப்பிரிக்காவை முதலில் பேட் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹென்ட்ரிக்சும், குவின்டான் டி காக்கும் களம் இறங்கினர். ஹென்ரிக்ஸ் 6 ரன்களில் வெளியேற, டி-காக் 52 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பவுமா 49 ரன்களுக்கு ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில், தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சாஹர் 2 விக்கெட்களும், சைனி, ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து, 150 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின், தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் 40 ரன்களில் வெளியேற, ரிஷப் பண்ட் 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். எனினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. கோலி 72 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் ஐயர் 16 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை கேப்டன் கோலி தட்டிச்சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் கோலி நேற்றைய டி20 போட்டியில் 72 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 71 போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்து 441 ரன்களுடன் கோலி முதலிடத்திலும், 2 ஆயிரத்து 434 ரன்களுடன் ரோஹித் சர்மா 2வது இடத்திலும் உள்ளனர். 2 ஆயிரத்து 283 ரன்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 3வது இடத்தில் உள்ளார்.