இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணிக்கு தடை கோரி மனு! அடப்பாவிகளா!!

Man Files Petition To Ban Pakistan Cricket Team Defeat To India

கடந்த ஜூன்.16ம் தேதி நடந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையேயான ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 89 ரன்கள் வித்தியாசத்தில் DLS முறைப்படி வென்றது. இப்போட்டியில், எந்தவித நெருக்கடியும் இன்றி, இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. அந்த அளவுக்கு பாகிஸ்தானின் ஆட்டம் மிகவும் சுமாராக இருந்தது.

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ரஸ் அகமது கொட்டாவி விட்டுக் கொண்டே போட்டியில் விளையாடியது, அந்நாட்டு ரசிகர்களால் கடும் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது. ‘போட்டிக்கு முந்தைய நாள், பீட்சாவும், பர்கரும் சாப்பிட்டு வந்தால், இப்படி கொட்டாவி விட்டுக் கொண்டு விளையாட வேண்டியது தான்’ என்று கிண்டல் செய்தனர்.

அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாக்., கேப்டன் சர்ப்ரஸை ‘மூளையில்லாத கேப்டன்’ என்று மிகக் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா சிவில் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பாகிஸ்தான் அணிக்கு விளையாட தடை விதிக்க வேண்டும் என்றும், பாகிஸ்தான் தேர்வு குழுவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மனு தாக்கல் செய்தவரின் பெயர் மற்றும் இதர விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், பாகிஸ்தானின் SAMAA செய்திச் சேனல் இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு, குஜ்ரன்வாலா சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றால், தோற்கும் அணியின் ரசிகர்கள் டிவியை தான் உடைத்து வந்தார்கள். இப்போது, அணிக்கே தடை கேட்கும் அளவுக்கு விளையாட்டுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிப்பதை பார்க்கையில், இதைப் பார்த்து சிரிப்பதா, வேதனைப்படுவதா என்று தெரியவில்லை