நான் தமிழச்சி! – இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் பெருமிதம்

Mithali raj india women cricket captain tamil girl
Mithali raj india women cricket captain tamil girl

Woman cricket captain Mithali Raj tweeted in Tamil: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் “தமிழ் என் தாய்மொழி, நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை” என ட்விட்டரில் தமிழில் பதிவிட்டிருப்பதற்கு நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அண்மையில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரை வென்றது. இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து மிதாலி ராஜுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ் தமிழ் என் தாய்மொழி, நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை” என டுவிட்டரில் பதிவிடுவதற்கு காரணம் என்ன என்று அலசினால், அதன் பின்னணி சுவாரசியமாக உள்ளது.

டுவிட்டரில் சுகு என்ற பெயரில் உள்ள ஒருவர் மிதாலி ராஜுக்கு தமிழ் தெரியாது என்றும் அவர் ஆங்கிலம், தெலுங்கு இந்தி பேசுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு மற்றொருவர், அவருக்கு தமிழ் தெரியாது என்றால் வீட்டில் இருக்கும்போது அவர் என்ன மொழியில் பேசுவார் என்று கேட்டுள்ளார்.

அதற்கு திரும்பவும் பதில் அளித்த அந்த நபர், மிதாலி ராஜ் எந்த நேர்காணலும் தமிழில் அளித்ததில்லை. பல நிகழ்ச்சிகளில் அவர் ஒரு வார்த்தைகூட தமிழில் பேசியதில்லை. நடிகைகளைப் போல அவருக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிதாலிராஜ் ராஜஸ்தானில் பிறந்தவர் என்றும் அவருடைய தந்தை ஐதராபாத்துக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார் என்றும் அவருடைய தாத்தா ஒரு தமிழர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு தமிழ் தெரியாது என்பதுதான் உண்மை என்றும் மேலும் வாதம் வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் தமிழன் என்பதில் பெருமைப்பட்டால், சில விளையாட்டு வீரர்களைத் தவிர, ஏன் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் விளையாட்டு வீரர்கள் இல்லை? அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்களும் மற்றவர்களைப் போல சாதிக்கமாட்டார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி டுவிட்டரில் கேள்வி கேட்டவருக்குதான் மிதாலிராஜ் தனது பக்கத்தில், “தமிழ் என் தாய் மொழி..

நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை.. ஆனால், இது எல்லாவற்றுக்கும் மேல், நான் இந்தியன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். மேலும் என்னுடைய அன்புக்குரிய சுகு என்னுடைய ஒவ்வொரு பதிவிலும், நீங்கள் என்னை தொடர்ந்து விமர்சிக்கிறீர்கள், நான் எப்படி, என்ன செய்ய வேண்டும் என்ற உங்கள் அன்றாட ஆலோசனைகள் என்னை தொடர்கிறது.” என்று பதில் அளித்துள்ளார்.