நியூசிலாந்து தோற்றும் பாகிஸ்தானுக்கு இப்படியொரு சோதனையா! யதார்த்தத்தை மீறிய வெற்றி சாத்தியமா?

nz vs eng world cup 2019 score updates
nz vs eng world cup 2019 score updates

நியூசிலாந்து அணி தோற்றும், அரையிறுதிக்கு முன்னேறுவதில் தர்மசங்கடமான, சவால் எனும் வகையறாவில் சேர்க்கவே முடியாத கொடூர சிக்கல் பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ளது. அது என்னவென்று, இறுதியாக பார்ப்போம். முதலில் நேற்று நடந்த சம்பவத்திற்கு வருவோம்.

செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் நகரின் ரிவர்சைட் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. இதில், டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன், பேட்டிங் செய்ய தீர்மானித்தார். ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்.

இந்த உலகக் கோப்பையில் பயங்கரமான ஓப்பனர்ஸ் யார்? என்ற கேள்விக்கு, உலகக் கோப்பைத் தொடர் தொடங்கிய போது சச்சின் அளித்த பதில், “என்னைப் பொறுத்தவரை, இந்தியா உட்பட பல அணிகளின் தொடக்கம் அபாரமாக உள்ளது. சிறப்பான தொடக்கத்தை கொடுக்கிறார்கள். ஆனால், ஆபத்தான ஓப்பனர்ஸ் என்றால், அது இங்கிலாந்தின் பேர்ஸ்டோ – ஜேசன் ஜோடி தான். அவர்களைக் கட்டுப்படுத்துவது தான் எதிரணி பவுலர்களுக்கு கடினம்” என்று தெரிவித்து இருந்தார்.

அவரின் கூற்றை சரமாரியாக நிரூபித்து வருகிறது இந்த ஜோடி. காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் ஜேசன் ராய், இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடிக்க, நேற்றைய போட்டியிலும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 61 பந்துகளில் 60 ரன்கள் அடித்த ராய், நீஷம் பந்தில் கேட்ச் ஆனார்.

அதேபோல், இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசிய ஜானி பேர்ஸ்டோ, நேற்றைய போட்டியிலும், சிறப்பாக விளையாடி 99 பந்துகளில் 106 ரன்கள் குவித்து மேட் ஹென்ரி ஓவரில் போல்டானார். இதன் மூலம், இந்த உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா, ஷகிப் அல் ஹசனை தொடர்ந்து, அடுத்தடுத்து இரு போட்டிகளில் சதம் விளாசிய மூன்றாவது வீரரானார் பேர்ஸ்டோ.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 123 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம், ஒரு உலகக் கோப்பைத் தொடரில், தொடர்ச்சியாக மூன்று சதம் கூட்டணி அமைத்த இரண்டாவது பார்ட்னர்ஷிப் எனும் பெருமையை ஜேசன் ராய் – பேர்ஸ்டோ இணை பெற்றது. 2015 உலகக் கோப்பையில் சங்கக்காரா – தில்ஷன் ஜோடி இதே சாதனையை படைத்திருந்தது. மேலும், ஒரே உலகக் கோப்பைத் தொடரில் மூன்று சதம் கூட்டணி அமைத்த மூன்றாவது ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் எனும் பெருமையையும் இந்த ஜோடி பெற்றுள்ளது.

கில்கிறிஸ்ட் – மேத்யூ ஹெய்டன்(2007)
ஆரோன் பின்ச் – டேவிட் வார்னர் (2019)
ஜேசன் ராய் – ஜானி பேர்ஸ்டோ(2019)

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 24, ஜோஸ் பட்லர் 11, பென் ஸ்டோக்ஸ் 11 என்று அடுத்தடுத்து அவுட்டாக, இங்கிலாந்தின் ரன் ரேட் வெகுவாக சரிந்தது. கேப்டன் மோர்கன் மட்டும் தாக்குப்பிடித்து 42 ரன்கள் அடிக்க, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.

40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து, கடைசி 10 ஓவர்களில் வெறும் 64 ரன்கள் மட்டுமே எடுத்தது.

2019ம் ஆண்டில் முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் இங்கிலாந்து அடித்த ரன்கள்:

418 v வெஸ்ட் இண்டீஸ்
113 v வெஸ்ட் இண்டீஸ்
373 v பாகிஸ்தான்
351 v பாகிஸ்தான்
311 v தென்னாப்பிரிக்கா
386 v வங்கதேசம்
397 v ஆப்கானிஸ்தான்
337 v இந்தியா
305 v நியூசிலாந்து.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ஹென்றி நிகோலஸ், வோக்ஸ் பந்தில் 0 ரன்களில் எல்.பி ஆனார். தொடர்ந்து, கப்தில் 8 ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னிலும், ராஸ் டெய்லர் 28 ரன்களிலும் வெளியேற, இங்கிலாந்து 69 ரன்களுக்குள் தனது பாதி பலத்தை இழந்தது. டாம் லாதம் மட்டும் 57 ரன்கள் எடுக்க, பின்னால் வந்த வீரர்கள் யாரும் தாக்குப்பிடிக்காததால், நியூசிலாந்து 45 ஓவர்களில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, 119 ரன்கள் வித்தியாசத்தில் எதிர்பார்த்ததை விட, பெரிய வெற்றியைப் பதிவு செய்தது இங்கிலாந்து.

இதன் மூலம், 12 புள்ளிகளுடன் மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. 1992ம் ஆண்டுக்குப் பிறகு, இப்போதுதான் உலகக் கோப்பை அரையிறுதிக்கு இங்கிலாந்து தகுதிப் பெற்றிருக்கிறது. நியூசிலாந்து 11 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இருப்பினும், நியூசிலாந்து அணிக்கே அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது.

பாகிஸ்தான் அணி, வரும் வெள்ளிக்கிழமை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றால், நியூசிலாந்தின் 11 புள்ளிகளை சமன் செய்யும். ஆனால், இங்கு பிரச்சனை என்னவெனில், பாகிஸ்தான் மைனசில் ரன் ரேட் வைத்திருப்பது தான்.

பாகிஸ்தான் ரன் ரேட் – (-0.792)
நியூசிலாந்து ரன் ரேட் – (+0.175)

ஒருவேளை, பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிப் பெற வேண்டுமெனில், அதில் எதார்த்தம் என்பதைத் தாண்டி சில குரளிவித்தைகள் செய்தாலை ஒழிய வேறுவழியில்லை. அதாவது, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கட்டாயம் முதலில் பேட்டிங் செய்தாக வேண்டும். அப்படி பேட்டிங் செய்தால், கீழ்கண்ட ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும்.

350 ரன்கள் அடித்து, வங்கதேசத்தை 311 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.

400 ரன்கள் அடித்தால், வங்கதேசத்தை 316 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.

450 ரன்கள் அடித்தால், வங்கதேசத்தை 321 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஒருவேளை வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது எனில், முதல் பந்து போடுவதற்கு முன்பே நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து, கட்டாயம் இந்த ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும்.