கலவரத்தில் முடித்த பாக்., – ஆப்கன் போட்டி! ஆஸ்திரேலியாவிடம் சரண்டரான நியூசிலாந்து

Pak vs Afg, world cup 2019
Pak vs Afg, world cup 2019

உலகக் கோப்பைத் தொடரில் நேற்று இரண்டு இரண்டு பரபரப்பான ஆட்டங்கள் ரசிகர்களுக்கு காரசாரமாக விருந்து படைத்திருக்கின்றன.

லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதின. டாஸ் வென்ற ஆப்கன், பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏற்கனவே ஆப்கன் அணி தொடரைவிட்டு வெளியேறிய நிலையில், பாகிஸ்தானையும் உடன் அழைத்துச் செல்லும் திட்டத்துடன் களமிறங்கியது. ஏனெனில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலேயே, ஆப்கன் கேப்டன் அதைத் தான் கூறியிருந்தார். ‘நாங்கள் தொடரில் இருந்து எலிமினேட் ஆகிவிட்டோம். வங்கதேசத்தையும் எலிமினேட் செய்ய வைப்போம்’ என்றார். (வங்கதேசம் வென்றது தனிக்கதை).

ரஹ்மத் ஷா, குல்பாதின் நைப் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆப்கனின் நோக்கம், 250 ரன்கள் சேர்த்து, பாகிஸ்தானை அதற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே. அந்த அளவுக்கு கடுமையான பந்துவீச்சு ஆப்கனிடம் இருந்தது, ஆனால், ஆப்கன் அணி எதிர்பார்த்து கிடைத்ததா? ரஹ்மத் ஷா 35 ரன்களிலும், குல்பாதின் நைப் 15 ரன்களிலும் வெளியேற, ஷாஹிதி 0 ரன்னில் அவுட்டானார். பிறகு, அலி கில் 24 ரன்களும், அஷ்கர் 42 ரன்களும், இறுதியில் சத்ரான் 42 ரன்களும் எடுக்க, ஆப்கன் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

10 ஓவர்கள் வீசி 47 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஷஹீன் அப்ரிடி. இதன் மூலம், உலகக் கோப்பை போட்டி ஒன்றில், நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் டீன் ஏஜ் கிரிக்கெட் வீரர் எனும் பெருமையைப் ஷஹீன் பெற்றார். அவரது வயது 19.

தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், முஜீப் உர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே பக்கர் சமான் 0 ரன்களில் வெளியேறினார். இமாம் உல் ஹக் 36 ரன்களும், பாபர் அசம் 45 ரன்களும் எடுத்து, முகமது நபி ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்ள, சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது ஆப்கன். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, இமாத் வாசிம் மட்டும் தாக்குப்பிடித்து களத்தில் நின்றுவிட்டார்.

கடைசி ஓவரில், வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், குல்பாதின் நைப் வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து, பாகிஸ்தான் வெற்றியை உறுதி செய்தார். இந்தியாவுக்கு எதிராக எப்படி பரபரப்புடன் ஆட்டத்தை முடித்ததோ, அதே போன்று நேற்று பாகிஸ்தானையும் ஆப்கன் பாடுபடுத்துவிட்டு தான் தோற்றது.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சிலர், மைதானத்திலேயே மிகக் கடுமையாக மோதிக் கொள்ள, இரு அணி வீரர்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். குறிப்பாக, இமாத் வாசிமை தாக்க, ரசிகர் மைதானத்திற்குள் நுழைய, அவரை பாதுகாப்பு வீரர்கள் மடக்கிப் பிடித்து கொண்டுச் சென்றனர். இதனால், வீரர்களின் பாதுகாப்பு நேற்று பெரும் கேள்விக்குறியானது.

இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. அடுத்து வங்கதேசத்துடன் அந்த அணி மோதவுள்ளது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க அதிலும், பாகிஸ்தான் வெற்றிப் பெற்றே தீர வேண்டும்.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

லார்ட்ஸில் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூஸி பவுலர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளால் தாக்குதல் நடத்த, ஆஸ்திரேலியாவின் தொடக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. வார்னர் 16 ரன்களிலும், ஸ்மித் 5 ரன்களிலும் பெர்கியூசன் பந்தில் அவுட்டாக, பின்ச் 8 ரன்களில் போல்ட் ஓவரில் எல்பி ஆனார். ஸ்டாய்னிஸ் 21 ரன்னிலும், மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் நீஷம் வீசிய பவுன்ஸ் பந்துகளுக்கு இரையானார்கள். இதனால், அந்த அணி 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

பிறகு ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா – அலெக்ஸ் கேரே, நியூசிலாந்து பவுலிங்கை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இதில், ஆச்சர்யம் என்னவெனில், அதிரடி வீரர் அலெக்ஸ் கேரே, ஒரு முறை கூட தவறான ஷார்ட்டுக்கு செல்லவில்லை. தேவையில்லாமல், பேட்டை சுழற்றவே இல்லை. அதே சமயம் தனது ஸ்டிரைக் ரேட்டை 100க்கு குறையாமல் பார்த்துக் கொண்ட விதம் அற்புதம். மறுபுறம், நங்கூரம் போட்ட கவாஜா 129 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்து, போல்ட் ஓவரில் ஸ்டம்ப்பை இழந்தார். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 107 ரன்கள் குவித்தது. இதனால், 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா. கேரே 72 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.

10 ஓவர்கள் வீசிய போல்ட் 51 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில், கடைசி ஓவரில் அவர் ஹாட் – ட்ரிக் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பிறகு நடந்தவை அனைத்தும் ரசிகர்கள் எதிர்பார்க்காதவை.

வழக்கம் போல் நியூசிலாந்து ஓப்பனர்கள் சொதப்பினர். கப்தில் 20 ரன்களிலும், நிகோலஸ் 8 ரன்களிலும் பெஹ்ரன்டோர்ப் ஓவரில் வெளியேற, வழக்கம் போல் கேப்டன் கேன் வில்லியம்சன் – ராஸ் டெய்லர் ஜோடி அணியை மீட்டெடுத்தது. வழக்கம் போல் அனைத்தும் நன்றாகவே சென்றுக் கொண்டிருந்தது, ஸ்டார்க் வீசும் வரை.

51 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்சன், மிட்சல் ஸ்டார்க்கின் அவுட் ஸ்விங் பந்தில் அலெக்ஸ் கேரேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், சிறிது நேரத்தில் ராஸ் டெய்லர் 30 ரன்களில், பேட் கம்மின்ஸ் ஓவரில் டாப் எட்ஜ் ஆக, அங்கிருந்து நியூசிலாந்து விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. ஸ்டார்க் வேகத்தில் அதன்பிறகு எந்த வீரரும் தாக்குப்பிடிக்க முடியவில்லை, முடிவில், 43.4வது ஓவரில் 157 ரன்களுக்கு அடங்கியது நியூசிலாந்து. 9.4 ஓவர்கள் வீசிய ஸ்டார்க் 26 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Aus vs NZ, World cup 2019
Aus vs NZ, World cup 2019

ராஸ் டெய்லர் தொடங்கி, அதன் பிறகு களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் பெரும்பாலானோர் தேவையில்லாத ஷாட்களால் தான் அவுட் செய்யப்பட்டனர். இலக்கு குறைவாக இருக்கும் போது, சிக்சருக்கே செல்ல வேண்டிய அவசியம் என்ன? டி20 மனநிலையில் அவர்கள் ஆடிய விதமே அவர்களை தோல்வியடைய வைத்தது.

இது அந்த அணியின் இரண்டாவது தோல்வியாகும். இதனால், அரையிறுதிக்கு முன்னேற, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிர்பந்தத்தில் நியூசிலாந்து உள்ளது. இனி வரும் ஒவ்வொரு போட்டியின் முடிவும், ஆஸ்திரேலியாவைத் தவிர ஒவ்வொரு அணிகளின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் என்பதால், உலகக் கோப்பை இப்போது தான் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.