இரண்டு வருடம் கழித்து இதயத்தை கொடுத்த பிவி சிந்து! உலக சாம்பியன்ஷிப்ஸ் கோப்பை வென்று வரலாற்றுச் சாதனை!

pv sindhu won badminton world championships title for first time
pv sindhu won badminton world championships title for first time

சுவிட்சர்லாந்தில் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு களம் கண்டனர். இதில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் மோதினார் இந்தியாவின் பி.வி சிந்து. இம்முறை தங்கம் வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் களம் கண்டார் சிந்து. அதன்படி, தொடக்கம் முதலே பி.வி. சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு ஒகுஹராவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 21-7 என பி.வி. சிந்து எளிதாகக் கைப்பற்றினார்.

2-வது செட்டிலும் அதே உத்வேகத்துடன் விளையாடினார். இதனால் 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி, அதையும் 21-7 எனக் கைப்பற்றி, ஜப்பான் வீராங்கனை நசோமியை தோற்கடித்துத் தங்கம் வென்றார். இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முதலாகத் தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பி.வி. சிந்து படைத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் பட்டம் வென்ற சிந்துவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

‘பி.வி. சிந்துவால் மீண்டும் இந்தியா பெருமையடைகிறது. பேட்மின்டன் வெற்றிக்கு வாழ்த்துகள். இளம்தலைமுறையினருக்கு பி.வி. சிந்துவின் வெற்றி முன்னுதாரணமாக இருக்கும்” என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப்ஸ் இறுதிப் போட்டியிலும் இதே ஒகுஹராவை தான் பிவி சிந்து எதிர் கொண்டார். அப்போது இறுதிப் போட்டி தொடங்கும் முன்பு பேசிய சிந்து, “வெள்ளிப் பதக்கம் எல்லாம் எனக்கு போதாது. எனது மெடலின் நிறத்தை இன்று நான் மாற்ற விரும்புகிறேன். இறுதிப் போட்டியில் வென்று தங்கத்தை வெல்வதில் மட்டுமே எனது எண்ணம் உள்ளது. இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டால், தங்கத்தை வென்றே ஆக வேண்டும். நாட்டிற்காக என்ன வேண்டுமானாலும் நாம் செய்யலாம். தங்கத்திற்காக நான் என் இதயத்தை கூட தர தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒகுஹராவுடன் தோற்ற சிந்து, கடந்த ஆண்டும் இறுதிப் போட்டியில் ஏமாற்றத்தை சந்தித்தார். இருப்பினும், வாழ்க்கை ஒரு வட்டம் தானே… இரண்டு வருடங்களுக்கு முன்பு எந்த இதயத்தை கொடுக்கத் தவறினாரோ, அதே இதயத்தை இம்முறை கொடுத்து, அதே எதிராளியை வென்று கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறார்.

வாழ்த்துகள் சிந்து!!!