சிங்கப்பூரை வீழ்த்தி சவுதி அரேபியா முன்னிலை..!

Saudi Arabia too strong as Singapore lose 3:0 (PHOTO: SAUDI ARABIAN FOOTBALL FEDERATION)

உலகக்கோப்பை ஆசிய அணிகளுக்கான தகுதிச்சுற்றில் சவுதி அரேபியா 3-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.

கத்தார் நாட்டில் 2022ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சிங்கப்பூர் – சவுதி அரேபியா அணிகள் ஆசிய தகுதி சுற்று போட்டியில் விளையாடினர். இந்த ஆட்டம் சவுதி அரேபியா புரைதா நகரில் மன்னர் அப்துல்லா சர்வதேச விளையாட்டரங்கில் (King Abdullah Stadium in Buraidah) நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கி சரியாக 28 ஆவது நிமிடத்தில் சவுதி அணிக்கு முதல் கோலை அடித்து அசத்தினார் அப்துல்பத்தா அசிரி. சிங்கப்பூர் அணிக்கு முதல்பாதியில் பல வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை அவர்கள் தவறவிட்டனர்.

அடுத்து 61 ஆவது நிமிடத்தில் அல் ஹம்தான் சவுதி அணிக்காக இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இரண்டாம் கோல் அடித்த அடுத்த ஆறு நிமிடத்தில் அசிரி மூன்றாவது கோலையும் அடித்து அசத்தினர். இதன் மூலம் மூன்று கோல்களுடன் தனது வெற்றி இலக்கை உறுதிசெய்தது சவுதி அரேபியா அணி.

உலக தர வரிசையில் 70 இடத்தில் சவுதி அரேபியா அணியும், 157 ஆவது இடத்தில் சிங்கப்பூர் அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியா உடன் கடைசி 6 போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் சிங்கப்பூர் அணி தோல்வியை தழுவியுள்ளது.

அடுத்த போட்டியாக சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான் அணியை வரும் செவ்வாய்க்கிழமை எதிர்கொள்கிறது.