அடங்க மறுக்கும் ஸ்மித்; ஆஷஸ் தொடரில் இரட்டை சதம் விளாசி அசத்தினார்!

England vs Australia, 4th Ashes Test: Steve Smith scores double century in Manchester

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் நான்காவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

ஆஷஸ் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ட்ராவிஸ் ஹெட் 19 ரன்களில் வெளியேற, மேத்யூ வேட் 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

எனினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்மித் சதம் விளாசினார். ஸ்மித் – கேப்டன் பெயின் ஜோடி சிறப்பாக விளையாட ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பெயின் 58 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்மித் இரட்டை சதம் விளாசி அசத்தினார். 310 பந்துகளில் 22×4 மற்றும் 2×6 உட்பட 211 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 211 ரன்களில் ஸ்மித் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கம்மின்ஸ் 4 ரன்களில் வெளியேற, மிச்செல் ஸ்டாக் அரைசதம் அடித்தார்.

8 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்திருந்த போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.