அரையிறுதிக்கு முன்னேறும் அந்த மூன்று அணிகள் எவை? புள்ளி விவரத்துடன் ஒரு அலசல்

World cup 2019, Semi Final Chances
World cup 2019, Semi Final Chances

நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடரில், தோல்வியே சந்திக்காத இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தியதால், அரையிறுதிக்கான வாய்ப்பு மேலும் சுவாரஸ்யமாகியுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், இந்தியாவின் தோல்வி, இந்த உலகக் கோப்பை தொடரை உச்சக்கட்ட பரபரப்புக்கு இட்டுச் சென்றுள்ளது.

அரையிறுதி சுற்றுக்கு ஆஸ்திரேலியா மட்டுமே இதுவரை தகுதிப் பெற்றிருக்கும் நிலையில், மீதமுள்ள அந்த மூன்று அணிகள் எவை எவை என்பதை ஓரளவுக்கு நம்மால் கணிக்க முடிந்தாலும், நாம் இதற்கு பல முறை சொல்லி வரும் விஷயம், ‘கிரிக்கெட் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒரு விளையாட்டு என்பது’. இங்கு எப்போது வேண்டுமானாலும், என்ன மாயமந்திரம் வேண்டுமானாலும் நடக்கலாம். கோபுரத்தில் இருப்பது வீதிக்கு வரலாம், வீதியில் இருப்பது உச்சிக்கு போகலாம்.

இத்தொடர் தொடங்கியதில் இருந்தே வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வந்த நியூசிலாந்து, வீழ்த்த முடியாத அணியாக தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. அப்போது, ஆஸ்திரேலியா இந்தியாவுடன் தோற்று பின்தங்கிய நிலையில் இருந்தது. ஆனால், அதன்பிறகு வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கிய ஆஸ்திரேலியா, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகப் போகிறது. ஆனால், அடுத்தடுத்த திடீர் தோல்விகளால் நிலை குலைந்த நியூசிலாந்து, இன்னமும் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது.

உலகக் கோப்பை தொடங்கிய போது, அசுர பலம் வாய்ந்த ஒரே அணி என்று வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்து, பல் பிடுங்கிய பாம்பாய் இருக்கும் இலங்கை, பாகிஸ்தான் அணிகளிடம் தோற்று விமர்சனத்துக்கு உள்ளானது. ஆஸ்திரேலியாவிடமும் உதை வாங்க, அரையிறுதி வாய்ப்புக்காக தத்தித் தடவிக் கொண்டிருந்த இங்கிலாந்து, தோற்கடிக்கப்படாத இந்திய அணியை கம்பீரமாக வீழ்த்தி தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இதனால் தான் யாராலும் கணிக்க முடியாது விளையாட்டு கிரிக்கெட் என்கிறேன்.

இந்த சூழ்நிலையில், உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேற எந்தெந்த அணிகளுக்கு அதிகம் வாய்ப்புள்ளது என்பது குறித்து புள்ளி விவரத்துடன் நாம் இங்கே பார்க்கலாம்.

இந்தியா

ஏழு போட்டிகளில், 5 வெற்றி, 1 தோல்வி மற்றும் 1 போட்டிக்கு முடிவின்மை என்று மொத்தம் 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய அணிக்கு, 2 ஆட்டங்கள் மீதமுள்ளன. அரையிறுதிக்கு முன்னேற இதில் ஒரு போட்டியில் வென்றால் போதும். மற்றொரு போட்டியில் தோற்றால் கூட, இந்தியா அரையிறுதி செல்வது உறுதி. ரன் ரேட் கூட இந்தியாவுக்கு பார்க்கத் தேவையில்லை. தேவைப்படுவது ஒரு நேரான வெற்றி மட்டுமே. ஒருவேளை 2 போட்டியிலும் தோற்றாலும், ரன் ரேட் கொண்டு, இந்தியா அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆகையால் இந்தியாவுக்கு பெர்த் உறுதி எனலாம்.

நியூசிலாந்து

நியூசிலாந்து நிலைமை சற்று சிக்கலாகவே உள்ளது. 8 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி, 1 முடிவில்லா ஆட்டம் என 11 புள்ளிகளுடன் உள்ளது. இங்கிலாந்துடன் மோதும் தனது கடைசிப் போட்டியில், கண்டிப்பாக நியூசிலாந்து வென்றாக வேண்டும். இல்லையெனில், மற்ற ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து, உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் நிலைமை கூட ஏற்படலாம்.

இங்கிலாந்து

8 ஆட்டங்களில் 5 வெற்றிகள், 3 தோல்விகள். மொத்தம் 10 புள்ளிகள். நியூசிலாந்துக்கு எதிராக கட்டாயம் வென்றாக வேண்டும். இல்லையெனில், நியூசிலாந்துக்கு சொன்னது போல, மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து, வெளியேற கூட நேரிடும். இருப்பினும், +1.000 என்ற அவர்களது ரன் ரேட், இறுதி நேரத்தில் கைக்கொடுக்கலாம்.

பாகிஸ்தான்

8 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி. 1 போட்டியில் முடிவில்லை. மொத்தம் 9 புள்ளிகள். இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் தோல்வி, பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை மேலும் சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக வெற்றிப் பெற வேண்டும். அதற்கு முன், வங்கதேசம் இன்று நடக்கவுள்ள போட்டியில் இந்தியாவிடம் தோற்க வேண்டும். அதேபோல், இங்கிலாந்து நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும். இவை அனைத்தும் நடந்தால், அரையிறுதிக்கு நான்காவது அணியாக பாகிஸ்தான் முன்னேறும்.

வங்கதேசம்

7 போட்டிகளில் 3 தோல்வி, 3 வெற்றி. ஒரு போட்டியில் முடிவில்லை. மொத்தம் 7 புள்ளிகள். மீதமுள்ள இரு போட்டிகளில் இந்தியாவையும், பாகிஸ்தானையும் வீழ்த்த வேண்டும். அதேசமயம், இங்கிலாந்தை நியூசிலாந்து வீழ்த்த வேண்டும். இவை அனைத்தும் நடக்கும் பட்சத்தில் வங்கதேசம், நான்காவது அணியாக அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

மற்றபடி, இலங்கைக்கு இன்னும் ஒரு ஓரத்தில் வாய்ப்பு இருந்தாலும், ரன் ரேட் மிக மிக குறைவாக இருப்பதால், அரையிறுதிக்கு முன்னேறுவது என்பது கனவாக முடியவே அதிகம் வாய்ப்புகள் உள்ளன.

தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உலகக் கோப்பையில் வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.