உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தெறிக்கவிட்ட இளவேனில்; பேத்தி வருகைக்காக காத்திருக்கும் தாத்தா, பாட்டி!

ISSF World Cup: India's Elavenil Valarivan wins 10m Air Rifl

கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பத்தில் வசிப்பவர் உருத்திராபதி (84). ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர். இவரது மனைவி கிருஷ்ணவேணி (74). இவர் களுக்கு வாலறிவன் என்கிற மகன் உள்ளார். இவரின் மனைவி சரோஜா. இவர்களுக்கு இறைவன் என்கின்ற மகனும், இளவேனில் என்கிற மகளும் உள்ளனர். இவர்கள் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருகின்றனர்.

இளவேனில் தற்போது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 3வது இந்தியர் என்ற பெருமையையும் இளவேனில் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பத்தில் வசித்து வரும் தாத்தா உருத்திராபதி – பாட்டி கிருஷ்ண வேணி ஆகியோர் தங்களது பேத்தி இளவேனில் வெற்றி குறித்து செய்தியாளர் களிடம் கூறியதாவது:

எங்களது மகன் வாலறிவன். அவரது மனைவி சரோஜா கன்னியாகுமரி மாவட்டம் இடையன்விளையை சேர்ந்தவர். இவர்கள் 2 பேரும் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இறைவன் ( 24) என்கிற மகனும், இளவேனில் (19) என்கிற மகளும் உள்ளனர்.

எங்களது பேத்தி இளவேனில் கடலூரில் பிறந்தார். அதன் பிறகு எனது மகன் வாலறிவன், பணி நிமித்தம் காரணமாக குஜராத் மாநிலத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருமகள் சரோஜா அங்குள்ள தனியார் கல்லூரியில் முதல் வராக இருந்து வருகிறார்.

பேரன் இறைவன் தற்போது ராணுவத் தில் பணிபுரிந்து வருகிறார். இறைவன் சிறப்பாக துப்பாக்கி சுடுவார். இதனைப் பார்த்த எங்களது பேத்தி இளவேனில் 7ம் வகுப்பு படிக்கும் போது, நானும் துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட போகிறேன் என ஆர்வமாக கூறினார். உடனே எனது மகன், என் பேத்தியைப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டார்.

அவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் டாக்டர் மற்றும் இன்ஜினியரிங் படிப்புக்கான சீட் கிடைத்தது. ஆனால் அந்த துறை படிப்பில் கவனம் செலுத்தினால் துப்பாக்கி சுடும் பயிற்சியில் சரியான முறையில் கவனம் செலுத்த முடியாது என இளவேனில் எண்ணிக்கொண்டு அந்தப் படிப்பை தவிர்த்து விட்டார். தற்போது இளங்கலை படிப்பு படித்து வருகிறார்.

இதற்கிடையில் ஜப்பான், மலேசியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசுகளைப் பெற்றார்.

ஒவ்வொரு முறையும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும்போது, ‘சிறப்பான சாதனை புரிய வேண்டும்’ என ஊக்கம் அளித்து வந்தோம். அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார்.

தற்போது உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் எங்களது பேத்தி இளவேனில் செய்துள்ள சாதனை எங்களுக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் வருங்காலங்களில் இளவேனில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இளவேனிலுக்கு நாங்கள் தங்க பரிசு அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று பெருமிதத்துடன் தெரிவித்தனர்.