சிங்கப்பூரில் சைக்கிள் விபத்துகள் அதிகரிப்பு!

Photo: Mediacorp

 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சிங்கப்பூரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும், கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

மற்றொரு புறம் கொரோனா வைரஸ் நம்மை தாக்கி விடக் கூடாது என்பதற்காக, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழ வகைகள், காய்கறிகள் போன்றவை உண்ணுதல், தினந்தோறும் காலை, மாலை என இருவேளைகளில் உடற்பயிற்சி செய்தல், யோகா, சைக்கிளிங் போன்றவற்றில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

 

அந்த வகையில், சிங்கப்பூரில் சைக்கிளிங் செல்வோரின் எண்ணிக்கை கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு சைக்கிள் சம்பந்தப்பட்ட சாலைப் போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

கடந்த 2020- ஆம் ஆண்டு சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட 572 போக்குவரத்து விபத்துகள் நிகழ்ந்தன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 25% அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு 459 விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்று போக்குவரத்து காவல்துறை அளித்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

அபாயகரான விபத்துகளின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. இது கடந்த 2019- ஆம் ஆண்டில் 9 ஆக இருந்த நிலையில் 2020- ஆம் ஆண்டு 7 ஆக குறைந்தது. 2018- ஆம் ஆண்டு சைக்கிள் சம்பந்தப்பட்ட 501 விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் 10 விபத்துகள் அபாயகரமானவை. இந்த ஆண்டிற்கான புள்ளி விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்துகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

 

மே மாதம், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக (Nanyang Technological University Campus) வளாகத்தைச் சுற்றி 49 வயதுடைய பெண் ஒருவர் சைக்கிளிங் சென்றுக் கொண்டிருந்த போது பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.

 

“சிங்கப்பூரில் உள்ள அனைத்து விரைவுச்சாலைகளிலும் கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிவேக செல்கின்றன.எனவே, இந்த சாலைகளில் சைக்கிளிங் செல்லக்கூடாது. சைக்கிளிங் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். முறையான சாலைப் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடித்து பாதுகாப்பான சைக்கிளிங் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்” என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

சைக்கிள் ஓட்டுவது முக்கிய உடற்பயிற்சி ஆகும். இதனால் சுற்றுச்சூழல் மாசு குறைகிறது. உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்காக செலவு செய்யப்படும் தொகையும் குறைக்கிறது. எனவே, நாள்தோறும் சைக்கிளிங் செல்வது முக்கியம் என்பது ஒருபுறம் இருந்தாலும், மற்றவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், விபத்துகளுக்கு இடமளிக்காமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.