சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்

1970ம் ஆண்டில், உத்வேகமும் ஆர்வமும் நிறைந்த நமது கலைஞர்களில் சிலர் சக உள்ளூர் கலைஞர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க எண்ணி ஒரு சங்கத்தை நிறுவினர். கலை சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்துடன் சங்கத்திற்கு “சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்” எனப் பெயரிட்டு 1971ம் ஆண்டில் சங்க பதிவகத்தில் பதிவு செய்தனர்.

நமது சங்கத்தின் முதல் செயற்குழு “கலை ஆரம்” எனும் கலை நிகழ்ச்சியை உற்சாகத்துடன் அரங்கேற்றி தனது முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்தது.

தொடர்ந்து சிங்கப்பூரின் புகழ் பெற்ற விக்டோரியா அரங்கத்தில் “கல்யாணமாம் கல்யாணமாம்” எனும் நாடகத்தை ஆறு முறை அரங்கேற்றி நம் சங்கம் மாபெரும் சரித்திர புகழ் படைத்தது.

மேலும் பல வெற்றி நாடகங்களை அரங்கேற்றி வந்த நம் சங்கம், அரசாங்கம் நடத்திய நாடக விழாவில் பங்கு கொண்டு பல வெற்றிக் கோப்பைகளை வென்று வந்தது. உள்ளூரில் மட்டுமின்றி, தமிழ் நாட்டிலும் நாடகங்களை அரங்கேற்றி வெற்றி வாகை சூடியுள்ளது.

முப்பது உறுப்பினர்களுடன் தொடங்கி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ள சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் மேலும் பல திறன்மிக்க கலைஞர்களை உருவாக்கி தொடர்ந்து வெற்றிப் பாதையில் பீடு நடைபோடும் என்ற நம்பிக்கையும் தொலைநோக்கும் கொண்டுள்ளது.