அங் மோ கியோ அவென்யூ 6-ல் தீ விபத்து- ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதி!

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

 

நேற்று (16/06/2021) காலை 09.40 மணியளவில் சிங்கப்பூரில் பிளாக் 123 அங் மோ கியோ அவென்யூ 6-ல் (Block 123 Ang Mo Kio Avenue 6) உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏழாவது மாடியில் (7th Floor) பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படைக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் தீயணைப்புத்துறை வீரர்கள் சுவாச கருவியை (Breathing Apparatus Set) அணிந்துக் கொண்டு தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்புக்குள் உள்ளே நுழைந்தனர். அங்கு தீ விபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவரை சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக வெளியேற்றினர்.

 

மேலும், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் தீ விபத்து நிகழ்ந்த அறையில் இருந்த அனைத்து பொருட்களும் முழுவதும் எரிந்து தீக்கரையானது.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பிளாக்கின் 5 முதல் 9 மாடி வரை வசிக்கும் சுமார் 130 குடியிருப்பாளர்களை சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பத்திரமாக வெளியேற்றினர். அதேபோல், 2 முதல் 4- வது மாடி வரை அவ்வா (AWWA) நர்சிங் ஹோமில் இருந்த பணியாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாக தாங்களாகவே வெளியேறினர்.

 

இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த ஏழு குடியிருப்பாளர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனை (Singapore General Hospital), கூ டெக் புவாட் மருத்துவமனை (Khoo Teck Puat Hospital) மற்றும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (National University Hospital For Smoke Inhalation) தீயணைப்பு வீரர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.

 

இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.