சிங்கப்பூர் வருகை அட்டைக்கு அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கப் பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

Photo: Singapore Immigration & Checkpoints Authority

 

சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (Singapore Immigration & Checkpoints Authority- ‘ICA’) இன்று (17/06/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூர் வருகை அட்டை ஆன்லைன் விண்ணப்பம் (Singapore Arrival Card Online Application) என்ற பெயரில் இணையதளம் உள்ளது என்பது குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இதில் விண்ணப்பத்தாரர்களுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம், ‘சிங்கப்பூர் வருகை அட்டை விண்ணப்பம்’ (Singapore Arrival Card- ‘SGAC’) தொடர்பான இ-சேவைக்கு (e- Services) எந்தவொரு விண்ணப்பக் கட்டணத்தையும் விதிக்கவில்லை. சிங்கப்பூர் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் வருகை அட்டை விண்ணப்பத்திற்கு இ-சேவை மூலம் பயணிகள் தங்கள் பயண விவரங்களையும் (Travel Details), உடல் ஆரோக்கியம் (Health Declaration) குறித்த தகவலையும் இ-சேவை என்ற மின்னணு முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

 

இத்தகைய சேவைகளைப் பயணிகளுக்கு வழங்கும் வணிக நிறுவனங்கள் அவர்களிடம் சேவை கட்டணத்தைப் பெறுகின்றன. இந்த சேவைகளை குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் ஆதரிக்கவும் இல்லை; அங்கீகரிக்கவும் இல்லை.

 

எனவே, பயணிகள் தங்கள் விண்ணப்பங்களை சிங்கப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ சிங்கப்பூர் வருகை அட்டை விண்ணப்பத்திற்கு https://eservices.ica.gov.sg/sgarrivalcard/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தனிப்பட்ட சமர்ப்பிப்புகளுக்கு (Individual Submissions) சுமார் 3 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்த இ- சேவை (SGAC e- Service) தற்போது தமிழ், இந்தி, வியட்நாமிஸ், மாண்டரின், பஃஹாசா, மெலாயு (Tamil, Hindi, Vietnamese, Mandarin, Bahasa, Melayu) ஆகிய ஆறு மொழிகளிலும் கிடைக்கிறது.

 

அதேபோல், சிங்கப்பூர் வருகை அட்டைக்கான விண்ணப்பத்தை (Singapore Arrival Card Application) குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செல்ஃபோன் செயலி வழியாகவும் (SGAC App) விண்ணப்பிக்கலாம். இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஸ்டார் (Apple Store) ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.