இந்தியாவில் தளவாடத்துறையில் முதலீடு செய்த சிங்கப்பூர் நிறுவனம்!

Photo: CapitaLand

 

சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் கேபிடாலேண்ட் (CapitaLand Ltd). ஆசியாவின் மிகப்பெரிய பன்முகப்படுத்தப்பட்ட ரியல் எஸ்டேட் குழுமங்களில் ஒன்றாக கேபிடாலேண்ட் குழுமம் விளங்குகிறது.

 

இந்த நிறுவனம், இந்தியாவின் தளவாடத் துறையில் தனது இரண்டாவது தளவாட நிதி S$400- மில்லியன் மதிப்புள்ள தனியார் முதலீட்டு நிதியை (இந்திய மதிப்பு ரூபாய் 2,250 கோடி) அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் உற்பத்தி நகரங்களாக விளங்கும் அகமதாபாத், சென்னை, மும்பை, பெங்களூரு, புதுடெல்லி (National Capital Region- ‘NCR’), புனே ஆகிய ஆறு பெரு நகரங்களிலும், கோவை, கவுகாத்தி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ ஆகிய வளர்ந்து வரும் நகரங்களிலும் கிடங்குகள் மற்றும் உற்பத்தி மையங்களில் தளவாட சொத்துக்களை உருவாக்குவதற்கு கேபிடாலேண்ட் இந்தியா (CapitaLand India Logistics Fund II) தனது இரண்டாவது தளவாட நிதியை முதலீடு செய்துள்ளது.

 

கேபிடாலேண்ட் இந்தியா தளவாடத் துறை (CapitaLand India Logistics) முதலீட்டு நிதியின் சொத்துகளை அசெண்டாஸ்- ஃபர்ஸ்ட்ஸ்பேஸ் நிறுவனம் (Ascendas-Firstspace) நிர்வகிக்கிறது. கேபிடாலேண்ட் ஏற்கெனவே இந்தியத் தளவாடத் துறையில் தொடங்கிய முதல் நிதியையும் இந்த நிறுவனமே நிர்வகித்து வருகிறது.

 

முதலீடு குறித்து கேபிடாலேண்ட் ஃபைனான்சியல் நிறுவனத்தின் தலைவர் ஜனாத்தன் யாப் (Jonathan Yap, president, CapitaLand Financial) கூறுகையில், ” இரண்டாவது தளவாட நிதி, இந்தியத் தளவாடத் துறையில் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் அதிகமான நல்ல தரம் வாய்ந்த தளவாட வசதிகளை ஏற்படுத்தவும், அதே வேளையில் முதலீட்டாளர்களுக்கு அதிகமான லாபத்தை ஈட்டித் தரவும் வழி வகுக்கும்.

 

2024- ஆம் ஆண்டுக்குள் கேபிடாலேண்டின் FUM- ஐ குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலர்களாக வளர்ப்பதே எங்கள் இலக்கு. புவியியல் மற்றும் சொத்து வகுப்புகளில் புதிய நிதிகளை திரட்டுவதன் மூலமும், தற்போதுள்ள ரீட்ஸ் (ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள்), வணிக அறக்கட்டளைகளின் வளர்ச்சியை ஆதரிப்பதன் மூலமும் மற்றும் தனியார் நிதி மூலமும் நாங்கள் அவ்வாறு செய்வோம்” எனத் தெரிவித்தார்.