கொரோனா பெருந்தொற்று: ஆன்லைன் வணிகத்துக்கு மாறி வரும் நிறுவனங்கள்!

 

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில், அரசு படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வருகிறது. மேலும், முடங்கிப் போன மக்களின் இயல்பு வாழ்க்கையும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. எனினும், பொதுமக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவது; பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

சிங்கப்பூர் முழுவதும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றன.

 

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு அமல்படுத்திய கடுமையான கட்டுப்பாடுகளால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் தொழில் முடக்கம் காரணமாக பொருளாதார ரீதியிலாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பொதுமக்கள் வெளியே வந்து பொருட்கள் வாங்குவது குறைந்துள்ளதால், வியாபாரம் மந்த நிலையிலேயே நீடிப்பதாகக் கூறுகின்றன வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள்.

 

இதனால் தாங்கள் உற்பத்திச் செய்யும் பொருட்களை டிஜிட்டல் முறையில் இ-காமர்ஸ் (e-commerce) எனப்படும் ஆன்லைன் வணிகம் மூலம் விற்பனை செய்யும் முறைக்கு மாறியுள்ளனர். ஒரு சிலர் ஆன்லைன் முறையில் விற்பனையில் இறங்குவது தொடர்பாக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

 

“ஆன்லைன் வணிகம் மூலம் கடைகளுக்கு நாங்கள் செலுத்துக்கின்ற வாடகை சேமிக்கப்படுகிறது. இதர செலவினங்களும் குறைந்துள்ளது. ஆன்லைன் வணிகம் மூலம் பொருட்கள் உடனடியாக விற்கப்பட்டு, பணமும் கிடைக்கிறது. எந்தவொரு இடையூறும் இதில் ஏற்படவில்லை” என்று வணிகர்கள் கூறுகின்றன.

 

தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான லாசாடாவின் சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் சாங் (James Chang, CEO of Lazada Singapore) கூறுகையில், “இந்த பெருந்தொற்று நோய் காரணமாக ஆன்லைன் வணிகம் வளர்ந்துள்ளது. ஒரு தொழில் முனைவோர் தங்கள் சில்லறை வணிகத்தைத் தொடங்குவதற்கு நுழைவுவதற்கான செலவு அதிகமாக உள்ளது. நுழைவுக்கானத் தடையை எங்களால் குறைக்க முடிந்தால், மிகவும் துடிப்பான தொழில் முனைவோரை நாம் உண்மையில் வளர்த்து உற்சாகப்படுத்த முடியும் என நம்புகிறோம். சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரும் காலங்களில் அதிகளவில் ஆன்லைன் விற்பனையைத் தொடங்குவர்” என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா பெருந்தொற்று ஒருபுறம் சிரமத்தைக் கொடுத்தாலும், மற்றொரு புறம் ஆன்லைன் வணிகம் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் முறைகளைக் கற்றுக்கொடுத்துள்ளது. சிங்கப்பூர் மட்டுமல்லாமல் இந்தியா உள்பட வெளிநாடுகளில் உணவுகள் முதல் உடைகள், மின்னணு சாதனங்கள், மளிகைப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வாங்கி கொள்வது அதிகரித்துள்ளது. இதனால் அந்த துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த டிஜிட்டல் பயன்பாட்டு முறையை அதிகளவில் பயன்படுத்துகின்றன.

 

வரும் நாட்களில் சிங்கப்பூரில் ஆன்லைன் வணிகம் நாட்டின் பொருளாதாரத்தைக் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.