வீட்டுவசதி வாரியத்தின் மறுவிற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து உயர்வு!

Photo: TODAY

 

சிங்கப்பூரில் அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என பொதுமக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

சிங்கப்பூர் முழுவதும் கொரோனா தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றன. மேலும், கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டெழுந்து வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூரில் வீடுகளின் விற்பனையும், அதன் விலையும் உயர்ந்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

 

வீட்டுவசதி வாரிய மறுவிற்பனை சந்தை (Housing Board Resale Market) கடந்த மாதம் விரைவாக உயர்ந்தது, விலைகள் தொடர்ந்து ஏறிக்கொண்டிருந்தன. மேலும், கொரோனா நடவடிக்கைகள் இறுக்கமடைந்ததால் அதிகமான குடியிருப்புகள் கை மாறின. ரியல் எஸ்டேட் போர்டல் எஸ்ஆர்எக்ஸ் (Real Estate Portal SRX) நேற்று (08/07/2021) வெளியிட்ட ஃபிளாஷ் தரவுகளின்படி, தொடர்ந்து 12- வது மாதமாக வீட்டுவசதி வாரிய மறுவிற்பனை வீட்டு விலைகள் அதிகரித்தன. மறுவிற்பனை விலைகள் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் 0.9% அதிகரித்துள்ளது. ஆண்டு அடிப்படையில், கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் மாதத்தைக் காட்டிலும், நடப்பாண்டு ஜூன் மாதத்தில் வீட்டுவசதி வாரிய மறுவிற்பனை வீடுகளின் விலைகள் 13.2% உயர்ந்தன.

 

கடந்த மாதம் மொத்தம் 2,311 மறுவிற்பனை குடியிருப்புகள் கை மாறியது. இது முந்தைய மே மாதத்தைக் காட்டிலும் 17.5% அதிகம்.

 

“வீட்டுவசதி வாரிய மறுவிற்பனை சந்தை வழக்கம் போல் வணிகத்திற்கு திரும்பியுள்ளது” என்று ஐஆர்ஏ ரியால்டி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத் தலைவர் நிக்கோலஸ் மேக் (ERA Realty head of research and consultancy Nicholas Mak) தெரிவித்துள்ளார்.

 

கடந்த மே மாதத்தில் 13 வீட்டு வசதி வாரிய மறுவிற்பனை வீடுகள் குறைந்தது ஒரு மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு விலைபோன நிலையில், ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது.

 

வாம்போவாவில் (Whampoa) கடந்த 49 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 210 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீடு 1.268 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு விற்கப்பட்டது. இதன்மூலம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மறுவிற்பனை வீடுகளில் அதிக விலைக்கு விற்பனையான வீடு என்ற சாதனையைப் படைத்தது.

 

விற்கப்பட்ட 19 மில்லியன் டாலர் குடியிருப்புகள் கடந்த மாத மொத்த மறுவிற்பனை பரிவர்த்தனைகளில் 0.8% ஆகும். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 106 வீட்டுவசதி வாரிய மறுவிற்பனை வீடுகள் ஒரு மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு மேல் விற்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த விலைக்குமேல் 24 வீடுகளே கைமாறின.

 

குறிப்பாக, மத்திய பகுதியில் உள்ள பினக்கல்@டக்ஸ்டன் (Pinnacle @ Duxton) குடியிருப்பில் மட்டும் 30 வீடுகள் ஒரு மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு மேல் விலைபோயின. குவீன்ஸ்டவுனிலும், பிஷானிலும் (Queenstown and Bishan) தலா 16 வீடுகள் அந்த விலைக்கு மேல் விற்கப்பட்டன.

 

வரும் நாட்களிலும் வீட்டுவசதி வாரிய மறுவிற்பனை வீடுகளின் விலை உயரும் என்றும், வீடுகளை வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றன.