இந்திய அனிமேஷன் நிறுவனத்துடன் கைக்கோர்த்த சிங்கப்பூர் சுற்றுலா வாரியம்!

Photo: Singapore Tourism Board

 

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (Singapore Tourism Board- ‘STB’), சிங்கப்பூரில் மெய்நிகர் சாகச பயணம் (virtual Adventure) மூலம் இந்திய சந்தையைக் கவர்ந்து ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.

 

இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான பயணங்கள் கொரோனா பெருந்தொற்று காரணமாக முடங்கி கிடைக்கின்றன. இந்த நிலையில், சிங்கப்பூரில் சோட்டா பீம் – சாகச பயணங்களை (Chhota Bheem – Adventures) வெளிக்கொணர ஸ்ட்ரீமிங் சேவையான ‘வூட் கிட்ஸ் மற்றும் கிரீன் கோல்டு அனிமேஷன்’ (Voot Kids and Green Gold Animation) என்ற இந்திய அனிமேஷன் நிறுவனத்துடன் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

‘சோட்டா பீம்’ ஒரு பிரபலமான இந்திய கார்ட்டூன் மற்றும் குறுந்தொடர் ஆகும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி பார்க்கக்கூடிய தொடர். இந்த தொடர் சிங்கப்பூர் முழுவதையும் காட்டுகிறது. மேலும், இந்த தொடர் ஏழு பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் சுமார் மூன்று நிமிடங்கள் ஓடக் கூடியவை.

 

சோட்டா பீமும் அந்த கதாபாத்திரத்தின் நண்பர்களும் சிங்கப்பூரின் மிகப் பிரபலமான இடங்களைச் சுற்றிப் பார்ப்பதை, அந்தத் தொடர் சித்தரிக்கிறது. ஜுவல் சாங்கி விமான நிலையம் (Jewel Changi Airport), எச்எஸ்பிசி ரெயின் வோர்டெக்ஸ் (HSBC Rain Vortex), சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா (Singapore Botanic Gardens), சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலை (Singapore Zoo) மற்றும் நைட் சஃபாரி (Night Safari) போன்ற முக்கிய இடங்களுக்கு சோட்டா பீம் தனது நண்பர்களுடன் வலம் வருவதை அந்த தொடரில் பார்க்கலாம்.

 

இந்தியர்கள் குடும்பமாக வந்துச் செல்லும் இடமாக சிங்கப்பூர் எப்போதுமே இருந்து வருகிறது. இது இந்தியாவில் உள்ள ரசிகர்களுக்கு சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் அளிக்கும் புன்னகை பரிசு. இந்த தொடரைக் கண்டு இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவிற்கான சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் பிராந்திய இயக்குநர் ஜி.பி.ஸ்ரீதர் (STB’s regional director for India,the Middle East and South Asia) தெரிவித்துள்ளார்.

 

கொரோனா தொடங்குவதற்கு முன்னர், சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த தொடர் மூலம், இந்திய சந்தையை சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் கவர்ந்து ஈர்த்து வருகிறது. இதன் மூலம், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரு நாடுகளிடையே, போக்குவரத்து வணிகம் விரிவடையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.