இந்தியா, சிங்கப்பூர் இடையே விமான சேவை- ஆகஸ்ட் மாதத்திற்கான அட்டவணையை வெளியிட்டது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’!

Photo: Air India Express Official Twitter Page

 

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. இதனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்; கைகளை அடிக்கடி கிருமிநாசினி (அல்லது) சோப்பு கொண்டு கழுவ வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதேபோல், தகுதி வாய்ந்தவர்கள் தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், இந்தியா முழுவதும் பெரும்பாலான தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், சர்வதேச பயணிகளின் விமான போக்குவரத்துக்கான தடையை வரும் ஜூலை 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation- ‘DGCA’) அறிவித்துள்ளது. எனினும், சர்வதேச சரக்கு விமான போக்குவரத்துக்கும், ‘வந்தே பாரத் மிஷன்’ (Vande Bharat Mission) மூலம் விமானங்களுக்கும் தொடர்ந்து
அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

அந்த வகையில், ‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் இயக்கப்படும் விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.

 

அதன் தொடர்ச்சியாக, வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கும் விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் விமான சேவை தொடர்பான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, இந்தியாவில் சென்னை, திருச்சி, ஹைதராபாத், கொச்சி, பெங்களூரு, விஜயவாடா ஆகிய ஆறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. இதில், ஆகஸ்ட் மாதம் முழுவதும் திங்கள்கிழமைகளில் மட்டும் சென்னை- சிங்கப்பூர், சிங்கப்பூர்- சென்னை இடையே இரு மார்கத்திலும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

 

ஆகஸ்ட் 24- ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூர் இடையே விமானம் (IX 988) இயக்கப்பட உள்ளது. மேலும், சிங்கப்பூரில் இருந்து விஜயவாடா வழியாக ஹைதராபாத்துக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX 987) இயக்கப்பட உள்ளது.

 

ஆகஸ்ட் மாதம், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் (IX 682) இயக்கப்பட உள்ளது. அதேபோல், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களிலும் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX 681) இயக்கப்பட உள்ளது.

 

இதற்கான விமான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.