‘இந்தியாவில் முக்கிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

Photo: Air India Express Official Twitter Page

 

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், சர்வதேச பயணிகளின் விமான போக்குவரத்துக்கான தடையை ஜூலை 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ( Directorate General of Civil Aviation- ‘DGCA’) உத்தரவிட்டுள்ளது. எனினும், சர்வதேச சரக்கு விமான போக்குவரத்துக்கு தடையில்லை; வந்தே பாரத் மிஷன் (Vande Bharat Mission) மூலம் இயக்கப்படும் விமானங்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இந்தியா- சிங்கப்பூர் (India- Singapore) இடையேயான விமான சேவையை அறிவித்துள்ளது.

 

இது தொடர்பான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) நேற்று (09/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவில் சென்னை, திருச்சி, பெங்களூரு, விஜயவாடா, ஹைதராபாத், கொச்சி ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து இம்மாதம் சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. மேலும், விமான சேவை தொடர்பான அட்டவணையை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விமான நிறுவனம் பதிவிட்டுள்ளது.

அந்த அட்டவணையின் படி, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இந்த மாதம் (ஜூலை) 5,12,19,26 ஆகிய தேதிகளிலும், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு 1,2,6,8,9,13,15,16,20,22,23,27,29,30 ஆகிய தேதிகளிலும், கொச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு 6,20 ஆகிய தேதிகளிலும், ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூருக்கு 13,27 ஆகிய தேதிகளிலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

 

அதேபோல், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இந்த மாதம் (ஜூலை) 5,12,19,26 ஆகிய தேதிகளிலும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு 2,3,7,9,10,14,16,17,21,23,24,28,30,31 ஆகிய தேதிகளிலும், சிங்கப்பூரில் இருந்து விஜயவாடாவுக்கு 13,27 ஆகிய தேதிகளிலும், சிங்கப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு 6,20 ஆகிய தேதிகளிலும், சிங்கப்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு 13,27 ஆகிய தேதிகளிலும் சிங்கப்பூரில் இருந்து கொச்சிக்கு 6,20 ஆகிய தேதிகளிலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.