இப்படியே போனா பொருளியலின் நிலை என்ன? – சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணவீக்கம்

singapore economy

சிங்கப்பூரின் வர்த்தக,தொழில்துறையின் துணையமைச்சர் Alwin Tan நாடாளுமன்றத்தில் பொருளியல் குறித்து உரையாற்றினார்.சிங்கப்பூரில் அடுத்த வருடம் பொருளாதாரத்தில் மந்தநிலை மற்றும் வேலையின்மை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறினார்.

சிங்கப்பூரின் பொருளாதாரம் இந்தாண்டு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டு முன்னுரைக்கப் பட்டுள்ளது.
இந்தாண்டு பொருளாதார மந்தநிலை எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று Tan கூறினார்.

எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் அதிகரித்தாலும் இந்தாண்டு இறுதியில் அது வீழ்ச்சியடையத் தொடங்கும் என்று கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு மத்தியில் சிங்கப்பூரின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருவதை அமைச்சர் Tan சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் முக்கியமான அபாயங்கள் தொடர்கின்றன என்றார்.இதற்கு எடுத்துக்காட்டாக கோவிட் பெருந்தொற்று,தீவிரமடையும் ரஷ்யா-உக்ரைன் போர்,நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி,இறக்குமதித் தடைகள் மற்றும் இறுக்கமான நாணயக் கொள்கை போன்றவற்றை முன்வைத்தார்.

பொருளாதார நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்தார்.சிங்கப்பூரர்களின் அக்கறைகளை அறிவதாகச் சொன்ன Tan ,சவால்கள் நிறைந்த பொருளியல் சூழலைக் கையாள புதிய திட்டங்களை அரசாங்கம் வைத்துள்ளதாகக் கூறினார்.

குறைந்த வருமானக் குடும்பங்களின் அடிப்படை வாழ்கைச் செலவினங்களை சமாளிக்க 1.5 பில்லியன் வெள்ளியை வழங்குவதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆதரவுத் திட்டத்தை சுட்டிக்காட்டினார்.

பணவீக்கத்தை எதிர்கொள்ள வேலைவாய்ப்பு,ஊதிய உயர்வு போன்ற சிறந்த வழிகள் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.