மலாய் மொழியில் கலந்த தமிழ் ருசி! மூலைமுடுக்கு வரை பரவி கம்பீரமாய் நிற்கும் வரலாற்று பின்னணி! – Nasi Kandar

Nasi Kandar
Nasi Kandar

Nasi Kandar : மலேசியாவில் ரெஸ்டாரண்ட்களை “நாசி கண்டார்” என்கின்றனர். இது தமிழில் இருந்து வந்ததாக பலரும் கூறுகின்றனர்.

உணவுக் கடைகளை மலாய் மொழியில் Restoran அல்லது Kedai Makan என்றுதான் அழைப்பர். நாசி கண்டார் என்றால் ஒரு வகை சாப்பாடு ஆகும். அந்த சாப்பாடுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உணவகம் மட்டுமே பெயர்ப் பலகையில் Restoran என்ற வார்த்தைக்கு பிறகு Nasi Kandar என்றும் அதற்குப் பிறகு எதாவது ஒரு சிறப்புப் பெயர் இருக்கும்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் மலாய் மொழியிலும் கடை என்ற தமிழ்ச் சொல்லே பயன்பாட்டில் உள்ளது. ஏராளமான தமிழ்ச் சொற்களை மலாய் மொழியில் காணலாம்.

உதாரணம்: முகம் – muka ; சிம்மாசனம் – singgasana ; சும்மா – cuma ; ராஜா – raja ; மாம்பழம் – mempalam ; நிச்சயம் – nescaya

நாசிக் கண்டார் (Nasi Kandar) என்பது வட மலேசியாவில் குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் ஒரு புகழ் பெற்ற உணவு வகையாகும். மலேசியாவின் மற்றப் பகுதிகளில் இவ்வுணவு வகை கிடைக்கப் பெற்றாலும் பினாங்கு மாநிலத்தில் விற்கப்படுகின்ற நாசிக் கண்டாரே மிகவும் பிரபலமானது. நாசிக் கண்டார் என்பது ஒரு வகை மீன் குழம்பு கலந்த சோறு என்பதாகும். சோறு மற்றும் அதில் மீன் குழம்பை ஊற்றி, அத்துடன் அவித்த வெண்டைக்காய் மற்றும் பொறித்த பாவற்காய், பொரித்த கோழி என அவரவருக்குப் பிடித்த சைடு டிஷ் உடன் இவ்வுணவு பரிமாறப்படுகின்றது.

நாசிக் கண்டார் என்பது மலேசிய தமிழ் முஸ்லிம் மக்களின் ஒரு பாரம்பரிய உணவு வகையாகும். நாசி என்றால் தமிழில் சோறு என்று பொருள்தரும். கண்டார் என்றால் தமிழில் காவடி என்று சொல்லலாம்.

இன்று நாசிக் கண்டார் உணவகங்களில் விற்கப்பட்டாலும் அக்காலத்தில் இவ்வுணவை விற்பவர்கள் நீண்ட கம்புகளின் நுனியில் அடுப்புகளைத் தொங்கவிட்டு, அந்த அடுப்புகளின் மீது சோற்றுப் பானையும் மற்றொரு முனையில் குழம்புப் பானையையும் வைத்துக் கொண்டு, அவைகளைக் காவடிபோல் தூக்கிச் சொன்று கூவிக்கூவி விற்பார்கள்.

அதனால்தான் இதற்கு நாசிக் கண்டார் (காவடி சோறு) என்கின்றப் பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

நாசிக் கண்டாரின் சுவை குழம்பில் தான் இருக்கிறது. வழக்கமான குழம்பிற்கும் இக்குழம்பிற்கும் நிறைய வேறுப்பாடுகள் உண்டு.

நாசி கண்டாருக்காக செய்யப்படுகின்ற மீன் குழம்பில் அரைத்துச் சேர்த்த மிளகாய் சாந்து, வெங்காயம், அன்னாசிப் பூ, இரம்பை இலை, வெங்காயத்தாள் என பல்வேறுப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

மேலும் நாசிக் கண்டாரின் சுவை என்பது வெறும் மீன் குழம்பில் மட்டுமல்ல. மாறாக இவ்வுணவு பரிமாறப்படும் பொழுது மீன் குழம்புடன், சேர்த்து கோழி குழம்பு, ஆட்டுக் குழம்பு, கணவாய் குழம்பு என பல்வேறான குழம்புகள் கலந்தப் பிறகே நாசிக் கண்டார் பரிமாறப்படும்.