இது நட்ராஜ் ஷாட்! கபில் தேவின் 175 நாட் அவுட் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?

1983ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பையை மையமாக வைத்து 83 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்து வரும் நிலையில், தமிழ் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் படத்தில் கபில்தேவின் ஃபேவரைட் ஷாட்டுடன் ரன்வீர் சிங் நடித்த புகைப்படத்தை அவர் இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இங்கிலாந்தின் Tunbridge Wellsல் நடந்த ஒரு பெரும் வரலாற்று நிகழ்வு, இன்றைய நவநாகரீக தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெரும் காற்று வீசிய அந்த நாளில் 4000 மக்கள் முன்னிலையில், ஜூன் மாதம் சனிக்கிழமை காலை அந்தச் சாதனையை நிகழ்த்தினார் ஹரியானா சூறாவளி.

சுருட்டை முடி, அடர் மீசை கொண்ட கபில் தேவ், 1983ம் ஆண்டு நடந்த Prudential உலகக் கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக, 175 ரன்களை விளாசினார். அந்தப் போட்டியில் அவர் அடித்த ‘நடராஜா ஷாட்’ தான் ரன்வீர் வெளியிட்டிருக்கும் அந்த ஸ்டில்.

ஒரு சோகம் என்னவெனில், இந்தப் போட்டி ரெக்கார்ட் செய்யப்படவில்லை என்பது தான்.

இதுவரை கண்டிராத மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் என கபில் தேவின் இந்த ஆட்டம் ஏன் புகழப்படுகிறது?

ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காத கபில் தேவ், 1983 உலகக் கோப்பையில் இந்தியாவை வெளியேற்றுவதிலிருந்து காப்பாற்றியது மட்டுமல்லாமல், அந்த மறக்கமுடியாத உலகக் கோப்பை வெற்றிக்கு வேகத்தையும் நம்பிக்கையையும் அணிக்குக் கொடுத்தார்.

அன்று பிபிசி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், கபிலின் சாதனையை கேமராவில் பதிவு செய்ய முடியவில்லை. அந்த ஆட்டம் பார்வையாளர்கள் மற்றும் தரை ஊழியர்களின் நினைவாக மட்டுமே அமைந்துவிட்டது. சுவாரஸ்யமாக, ஜூன் 8 அன்று நடந்த இந்தியா-ஜிம்பாப்வே 1983 உலகக் கோப்பை விளையாட்டு, Tunbridge Wells இதுவரை நடைபெற்ற ஒரே சர்வதேச போட்டியானது.

அந்த ஒரு வழக்கமான ஆங்கில கோடை காலத்தில், டாஸ் வென்ற பிறகு, பேட்டிங் செய்ய இந்தியா முடிவு செய்தது. ஜிம்பாப்வே அணியில் பீட்டர் ராவ்சன் மற்றும் கெவின் குர்ரன் ஆகியோர் அச்சுறுத்த காத்திருக்க, அணியில் மார்ஷல்-ஹோல்டிங் விளையாடவில்லை. ஆனால் அந்த நாளில், அபாரமாக வீசிய ஜிம்பாப்வே பவுலர்கள், இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வேரோடு பிடுங்கி அனுப்பினர்.

தொடக்க ஆட்டக்காரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கே ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்கள் கணக்குகளைத் திறக்காமலேயே பேக்கிங் செய்யப்பட்டனர். மொஹிந்தர் அமர்நாத், சந்தீப் பாட்டீல் மற்றும் யஷ்பால் சர்மா ஆகியோர் பின்னாலேயே அணிவகுக்க, இந்தியா 17/5 என்று இருந்தது.

கபில் உள்ளே நுழைந்தபோது, லன்ச்சுக்கு போட்டி முடிந்துவிடக்கூடும் என்ற உண்மையான கவலை இருந்தது. எச்சரிக்கையுடன் இன்னிங்சை தொடங்கிய கபில், கியர்களை வெறித்தனமாக மற்றும் மிருகத்தனமாக ஆட்டத்தை மாற்றினார், தொடர்ந்து வேகத்தை அதிகரித்தார். அவர் தனது முதல் 50 ரன்களை 26 வது ஓவரில் தான் எட்டினார். ஆனால் அடுத்த 50 ரன்களை 13 பந்துகளிலும், மூன்றாவது 50 ரன்களை 10 ரன்னிலும் விளாசினார் கபில்.

அவருடன் மறுமுனையில் ஆடிய ரோஜர் பின்னி, 22 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் மதன் லால் மற்றும் சையத் கிர்மானி முறையே 17 மற்றும் 24 ரன்கள் எடுத்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்களின் டக் அவுட்டுகளைத் தவிர, அமர்நாத் (5), பாட்டீல் (1), யஷ்பால் (9), ரவி சாஸ்திரி (1) ஆகிய நான்கு பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கில் வெளியேறினர்.

மேலும், ஜிம்பாப்வே கேப்டன் டங்கன் பிளெட்சர், கபில் பேட்டிங் செய்ய வந்த நேரத்தில் ராவ்சன் மற்றும் குர்ரானை பவுலிங் தாக்குதலில் இருந்து விலக்க முடிவு செய்தார். – தனது இந்த முடிவுக்கு வருத்தப்பட்டதாக, ஃபிளெட்சர் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கிர்மானியுடன் 9 வது விக்கெட்டுக்கு சேர்த்த 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்தியாவை 266/8 ஆக உயர்த்தியது. அவரது மராத்தான் இன்னிங்ஸின் முடிவில், கபில் 72 பந்துகளில் 181 நிமிடங்கள், 6 சிக்சர்கள், 16 பவுண்டரிகள் உதவியுடன் சதத்தைக் கடந்தார்.

ஜிம்பாப்வேவும் பேட்டிங்கில் இந்தியாவுக்கு கடும் சவால் அளித்தது. தொடக்க வீரர்கள் பிரவுன் 35 ரன்களும், பேட்டர்சன் 23 ரன்களும் எடுக்க, முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தது ஜிம்பாப்வே.

அமர்நாத் ஓவரில் கேப்டன் டங்கன் ஃபிளட்சர் 13 ரன்கள் எடுத்திருந்த போது, கபில் தேவின் அட்டகாசமான ஒற்றைக் கை கேட்ச்சால் வெளியேற்றப்பட்டார். இந்தியாவின் வெற்றிக்கு, இந்த கேட்ச் மிக முக்கிய காரணமாகும்.

இறுதிக் கட்டத்தில், குர்ரன் 73 ரன்கள் எடுத்து அச்சுறுத்தினாலும், 235 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆல் அவுட்டாக, இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை முத்தமிட அடுத்த அடியை எடுத்து வைத்தது.