சிங்கப்பூரில் நேதாஜி.. சிதறிய பிரிட்டன் படை.. குஷியான இந்தியர்கள்!

‘வங்கத்துச் சிங்கம்’, ‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ், மாபெரும் சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா விடுதலை பெறுவதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ எனத் தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை (Indian National Army) கட்டமைத்தார். இதில், அவருக்கு உறுதுணையாக தமிழர்கள் பெரும் அளவில் துணை நின்றனர். இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த பிரிட்டிஷாரை எதிர்த்து தாக்குதல் நடத்திய தீரம் மிக்கவர் போஸ். இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பை விரிவாகக் காண்போம்.

 

இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, 1897  ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்துவந்தார். படிப்பில், சிறந்த மாணவனாக விளங்கிவந்த போஸ், விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளில் ஈடுபாட்டுடன் இருந்துவந்தார். இளமைக் காலத்தில், , ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்ற பெண்ணுடன் நேதாஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, 1937-ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இதையடுத்து, இந்த காதல் தம்பதிக்கு, 1942 ஆம் ஆண்டு, அணிதா போஸ் என்ற மகள் பிறந்தார்.

 

லண்டனில் பணியாற்றச் சென்ற நேதாஜி, இந்திய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்யக் கூடாது’ எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து தாயகம் திரும்பி காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1938-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக நேதாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அடுத்தாண்டு கூடிய கூட்டத்தில், காந்தியின் விருப்பத்தை மீறி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், நேதாஜிக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் ஒத்துழைக்க மறுத்தனர். இதனால், வேறு வழியில்லாமல் காங்கிரசில் இருந்து வெளியேறி பார்வர்டு பிளாக் என்ற கட்சியை நிறுவினார்.

 

1941 -ம் ஆண்டு, கொல்கத்தாவில் இருந்து மாறுவேடத்தில் வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ், ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார். அங்கிருந்து மாஸ்கோ சென்று ஜெர்மன் தலைநகரான பெர்லினை அடைந்தார். ஹிட்லரை சந்தித்து ஆதரவையும் பெற்றார். அங்கு அவருக்கு முழு ராணுவப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூலை 2-ந் தேதி சிங்கப்பூர் வந்தடைந்தார் சுபாஷ் சந்திரபோஸ். அக்டோபர் 21-ம் தேதி, சிங்கப்பூரில் இருந்தபடியே, விடுதலை இந்திய தற்காலிக அரசாங்கத்தைப் பிரகடனப்படுத்தினார். சுபாஷ் சந்திரபோஸின் இந்த விடுதலை இந்திய அரசை 9 நாடுகள் ஆதரித்தன. கைராட்டையுள்ள மூவர்ணக் கொடியையே இந்திய தேசிய ராணுவத்தின் கொடியாக பறக்கவிட்டார் போஸ்.

 

சிங்கப்பூரில் இருந்தபடியே தனிராஜ்ஜியம் நடத்திவந்த போஸுக்கு இந்தியாவெங்கும் மக்களின் ஆதரவு கணிசமாக உயர்ந்து நின்றது. பல நாடுகளின் உதவியுடன் தனது ராணுவத்தை பலமாக வலுப்படுத்தினார் போஸ். சுபாஷ் சந்திர போஸின் வலுவான ராணுவம் ஆங்கிலேய அரசுக்கு சிம்மசொப்பனமாக இருந்துவந்தது. அப்போது சிங்கப்பூரை, ஜப்பான் ஆக்கிரமித்திருந்த சமயம். உபயம் இரண்டாம் உலகப்போர். ஜப்பான் படை சிங்கப்பூரில் முழு அராஜகத்தை கட்டவிழ்த்துவிருந்தது. சீன மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று புதைக்கப்பட்டனர். ஜப்பானுடன் போஸுக்கு இருந்த நெருங்கிய உறவால், சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்கள் ஜப்பான் படையினரால் பெரிதும் மதிக்கப்பட்டனர். இதனால், தமிழர்களுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் இருந்த உறவு இன்னும் நெருக்கமானது.

 

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஜப்பான் பிரிட்டனிடம் மண்டியிட்டது. இதனால், சிங்கப்பூரை விட்டு, 1945-ம் ஆண்டு 15-ந் தேதி போஸ் வெளியேற நேரிட்டது. இங்திருந்து, தனது நண்பர்களுடன் பேங்காக் நோக்கி பயணமானார் போஸ். பேங்காக் சென்றடைந்த போஸ், அங்கிருந்து சில நாட்கள் கழித்து, விமானப் பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்த விமானம் கிளம்பிய சில மணி நேரங்களிலேயே விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மாவீரன் நேதாஜி இறப்பு குறித்து பல்வேறு மரணங்கள் இன்றளவும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

*This article owned by our exclusive editor. Permission required for reproduction.