துரியன் பழங்கள் சிங்கப்பூருக்குள் வந்த கதை!

துரியன் பழங்கள் என்றதும் சிலருக்கு ஆழ்மனதில் எச்சில் ஊரும் சிலருக்கு அடிவயிறு கொமட்டிக் கொண்டுவரும். ‘பழங்களின் அரசன்’ எனச் சொல்லப்படும் துரியன் பழத்தின் சுவை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனாலும், இன்றளவும் துரியன் பழத்திற்கு தென் கிழக்கு ஆசியாவில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சிங்கப்பூரின் தேசிய பழம் எனக் கருதப்படும் அளவுக்கு புகழ்பெற்ற துரியனுக்கு சிங்கப்பூரின் பொதுவிடங்களில் அனுமதியில்லை. ஏன்? என்னதான் துரியன் பழத்தின் கதை.. வாருங்கள் பார்க்கலாம்.

தோரினா (Dorena) என்ற பழமையான நாடுதான் துரியன் பழத்தின் தாயகமாக கருதப்படுகிறது. மேலும், மலேசிய மொழியில் ‘முள்’ என்றால் துரியன் என்று அர்த்தம். பழத்தின் மீது முட்கள் அதிகமாக இருப்பதால், மலேசிய வார்த்தையான ‘துரியன்’ என்கிற பெயராலேயே அழைக்கப்படுவதாகவும் இன்னொரு கருத்து நிலவுகிறது. இது பலாப்பழத்தின் ‘லைட்’ வெர்சன் போலத் தோற்றமளிக்கிறது. இப்பழங்களைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே அதிகபட்சமாக 7 சுளைகள் வரை காணப்படும்.

History of durian fruits

“துரியோ ஜெபித்னஸ்’ என்ற அறிவியல் பெயர் கொண்ட துரியன் பழங்கள், தாய்லாந்து, பர்மா, வியட்நாம், சுமத்ரா, போர்னியோ, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. இந்தப் பழம், மரத்தில் இருக்குபோதே பழுத்து கீழே விழுந்துவிடும். துரியன் மரம் 120 அடி (தோராயமாக 36.6 மீ) வரை வளரக்கூடியது. துரியன் பழம், 20 முதல் 35 செ.மீ நீளமும், 18 முதல் 22 செ.மீ விட்டமும் கொண்டது.

துரியன் மரங்கள் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடைந்து, வருடத்திற்கு இரண்டு முறை பழங்களைத் தருகின்றன. இதன் எடை, 1 முதல் 9 கிலோ வரை இருக்கலாம். ஒரு துரியன் மரத்தின் மொத்த ஆயுட்காலம், 30 முதல் 60 ஆண்டுகள் வரை இருக்கக்கூடும் எனக் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், மரத்தில் இந்தப் பழம் பழுக்கத் தொடங்கியதும், ஒரு அழுகிய முட்டையின் வாடை சுற்றம் எங்கும் பரவத் தொடங்குகிறது. இதனால், பலர் இந்தப் பழத்தை உண்டாலும் இதன் வாடையைக் கண்டு அருவருப்பு அடைகின்றனர்.

இதற்கு நேர் மாறாக, இந்தப் பழத்தை விரும்பி உண்ணும் சிலர், இதன் சுவை சொர்க்கத்திலும் கிடைக்காது. துரியன் பழம் பூமியின் அமிழ்தம் என ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுகின்றனர். துரியன் பழத்தில் இருந்து வெளிப்படும் துர்நாற்றம் மிக அதிகமாக இருப்பதால், சிங்கப்பூரில் உள்ள விமானத் தளங்கள், ஹோட்டல்கள், பேருந்துகள், ரயில்கள் மற்றும் இதர பொது இடங்களில் தடைசெய்யப்பட்ட ஒரே பழமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரின் எம்ஆர்டி நிலையங்களில், இந்தப் பழம் தடைசெய்யப்பட்டுள்ளது என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கையும் பாய்ந்துள்ளது.

இந்தியர்களை விட சீனர்கள் மத்தியில் துரியன் பழங்களுக்கு அதிக கிராக்கி உள்ளது. சிங்கப்பூர் சீனர்கள் பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். தங்களது சொந்த வாகனத்தில் வாங்கிச் செல்லும் மக்கள் பலர், வீட்டில் வைத்து குடும்பமாக சுவைத்துச் சாப்பிடுகின்றனர். இதனால், துரியன் பழத்தின் விலையும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த துரியன் பழ ரகங்கள், பர்லியார் ஊராட்சியில் காணப்படுகிறது. ஒரே காலகட்டத்தில் இந்தியாவையும் சிங்கப்பூரையும் ஆண்டுவந்த ஆங்கிலேயர்கள், நீலகிரியில் இருந்து சிங்கப்பூருக்கு துரியன் பழங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ஒரு தகவல் உள்ளது. மேலும், பரவலாகவே தென் கிழக்காசியா முழுவதும் காணப்பட்ட துரியன் பழம், மலேசியாவில் அதிகம் பயிரிடப்பட்ட நிலையில், அதன் அண்டை நாடான, சிங்கப்பூரிலும் இயல்பாக அதன் வரத்து அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

துரியன் பழத்த ”டேஸ்ட்” பண்ணி பாக்கலாமா..?

 

*This article owned by our exclusive editor. Permission required for reproduction.