தாக்க வந்த தீவிரவாதிகள்.. பணயக் கைதியான மாஜி அதிபர் எஸ்.ஆர்.நாதன்.. சிங்கப்பூரின் திக் திக் நிமிடங்கள்!

 

சிங்கப்பூர் வரலாற்றில் லீ குவான் இயூ-வுக்கு இணையாகப் போற்றப்படும் இன்னொரு தலைவர் செல்லப்பன் ராமநாதன். இவர் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர். நாட்டின் பல முக்கியப் பொறுப்புகளை அலங்கரித்தவர். சிங்கப்பூரின் ‘இரண்டாம் தந்தை’ என அழைக்கப்படுபவர். மிக அதிக நாட்கள் அதிபராக இருந்த பெருமையைப் பெற்றவர். பொருளாதார தேக்க நிலையில் இருந்த சிங்கப்பூரை வளர்ச்சி நோக்கி அழைத்துச் சென்றவர். மூன்றாவது முறையாக அதிபர் பதவி தன்னை தேடிவந்த போதும் புன்னகையுடன் ‘நோ’ சொன்னவர். மறைந்த பிரதமர் லீ குவானின் அன்பைப் பெற்றவர். இதையெல்லாம் விட அவருக்கு இன்னொரு பெருமை உண்டு. அதுதான் அவரை சிங்கை மக்கள் இதயத்தில் அமர்த்தியது. இப்போதும் தேசமே அதைக் கண்ணீருடன் நினைவு கூருகிறது. அந்தச் சம்பவத்தைப் பார்ப்பதற்கு முன், செல்லப்பன் ராமநாதன் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

1924-ம் ஆண்டு ஜூலை மாதம் 03-ம் தேதி, சிங்கப்பூர் வாழ் தமிழரான, செல்லப்பன் – அபிராமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ராமநாதன். இவருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். குடும்பம் மிகவும் வறுமை நிலையில் வாடியது. இதனால், செல்லப்பன் குடும்பம் மலேசியாவின் ஜொகூர் மாநிலத்துக்கு (பணி நிமித்தமாக) குடிபெயர்ந்தது. அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் குமாஸ்தாவாக பணியில் சேர்ந்தார் செல்லப்பன். அது சிங்கப்பூரும் மலேசியாவும் ஒன்றாக இருந்த காலகட்டம். இங்கிருந்தபடியே குழந்தை ராமநாதனும் கல்விப் படிப்பை மேற்கொண்டு வந்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத விதமாக ரப்பர் தொழில் நலிவடைந்தது. இது, நாதன் அப்பாவை கடுந்துயரில் ஆழ்த்தியது. எப்படிக் குடும்பத்தைக் காப்பாற்றுவது எனும் வழி தெரியாமல், நாதனின் அப்பா மனமுடைந்து போனார். திடீரென, தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்த சோதனைகளால் திகைத்துநின்றார் நாதனின் தாயார்.

 

Nathan's Family

நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு விழி பிதுங்கி தனியே நின்றுகொண்டிருந்த நாதனின் அம்மா, மீண்டும் சிங்கப்பூர் வர முடிவெடுத்தார். ஆறு பேராக மலேசியா சென்றவர்கள், அப்பாவை இழந்து சொந்த ஊர் திரும்பினர். அப்பாவின் மரணம், வறுமை இரண்டும் நாதனின் குடும்பத்தைப் பிடித்து வாட்டியது. வேறு வழியில்லை, இதுதான் வாழ்க்கை என உணர்ந்து கஷ்டப்பட்டு வாழ்கையை நகர்த்தினர். வறுமையை விரட்ட வேலைக்குச் சென்றார் நாதன். அதே நேரம், படிப்பையும் அவர் கைவிடவில்லை. பகுதிநேரமாக வேலை பார்த்துக்கொண்டே படிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார் நாதன். இப்படியே பள்ளிகல்வி, உயர்கல்வி என படிப்பில் தேறினார் நாதன். மேல்நிலைப் பள்ளி பயிலும் போது, ஜப்பான் சிங்கப்பூர் மீது போர் தொடுத்தது. இதையடுத்து, ஜப்பான் நிறுவனம் ஒன்றில் சில காலம், நாதன் மொழி பெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்தார்.

மொழிபெயர்ப்புப் பணி அவருக்கு அரசியல் புரிதலை ஏற்படுத்தியது. அப்போது தொழிற்சங்கங்கள் மீது ஈடுபாடு ஏற்படுகிறது. அதையொட்டி, தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கேற்று போராடத் தொடங்குகிறார். இந்தச் சமயத்தில் தான், தனது வருங்கால மனைவியைச் சந்திக்கிறார். இந்தியாவின், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஊர்மிளா எனும் பெண்ணை தனது 34 ஆவது வயதில் மணமுடிக்கிறார். இதன் பிறகு நாதனின் வாழ்க்கை ஏறுமுகம்தான். ஆம், பல உயரிய பொறுப்புகளை காலம் அவர் கைகளில் வழங்கி அழகு பார்த்தது. சிங்கப்பூர் சிவில் சர்விஸ் சமூக ஆர்வலராக 1955-ல் வேலைக்குச் சேர்ந்தார். பிறகு, கப்பல் பணியாளர்களுக்கான நலவாரிய அதிகாரியாகப் பணியாற்றினார். 1962 முதல் 1965 வரை மனிதவள அமைச்சக இயக்குனர் உள்ளிட்ட பல முக்கியப் பதவிகளை வசித்துள்ளார். இந்த காலங்களில் செல்லப்பன் ராமநாதன் என்னும் பெயரைச் சுருக்கி எஸ்.ஆர்.நாதன் என வைத்துக் கொண்டார்.

இவையெல்லாம், நாட்டுக்காக அவர் வகித்த சில பதவிகள். ஆனால், 1974-ம் ஆண்டு நடைபெற்ற ‘லஜ்ஜூ’ சம்பவம், நாதனுக்கு தேசமே தலைவணங்கும் உன்னத நிலையைப் பெற்றுக் கொடுத்தது. சிங்கை மக்கள் மனதில் நாதனுக்கு  தனி சிம்மாசனம் போட்டது. சிங்கப்பூரின் புலாவ் புக்காம் தீவில் எண்ணெய்க் கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது. அப்போது நான்கு தீவிரவாதிகள் இந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். ஒரு படகை கூட அவர்கள் வெளியேற விடவில்லை. அந்த தீவின் முழுக் கட்டுப்பாடுகளும் அந்த 4 தீவிரவாதிகளின் கைகளுக்குச் சென்றது. அவர்களின் நோக்கம், சிங்கப்பூரில் இருந்து வியட்நாமுக்கு செல்லக்கூடிய எண்ணெயைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான். ஏனெனில், அப்போது வியட்நாம் போர் நடந்துகொண்டிருந்த நேரம். சிங்கப்பூரின் எண்ணெய்கள் தெற்கு வியட்னாமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. இதை, வடக்கு வியட்நாமும் அதன் ஆதரவாளர்களும் விரும்பவில்லை.

இதனால், ஜப்பானின் செம்படையில் இருந்தும் பாலஸ்தீனத்தில் இருந்தும் தலா இருவர் வீதம் ஆயுதங்களுடன் வந்து தீவை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீவில் இருந்த ‘லஜூ’ படகையும் அதில் இருந்தவர்களையும் சிறை பிடித்தனர். மத்திய தரைக்கடல் வழியே, பணயக் கைதிகளுடன் தீவிரவாதிகள் தப்பிச் செல்லும் போது சிங்கப்பூர் கடற்படை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டனர். ஆனால், பணயக் கைதிககளை விடுவிக்க மறுத்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், நாங்கள் விடுவித்தால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. அதனால், நாங்கள் நாட்டை விட்டு வெளியேறும் வரை எங்களுடன் யாரவாது வரவேண்டும். அப்போதுதான் இவர்களை நாங்கள் விடுவிப்போம் எனப் பேரம்பேசினர். கடற்படை அதிகாரிகள் சற்று யோசித்தனர். உடனே, பாதுகாப்புத் துறைக்குத் தகவல் பறந்தது.

LAJU

அப்போது, சிங்கப்பூரின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை தலைவராக இருந்தவர் எஸ்.ஆர்.நாதன். பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கைக்கும் அவரே பொறுப்பு. தீவிரவாதிகளிடம் ஒரு வாரம் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில், “நாங்கள் குவைத் செல்லவேண்டும். எங்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தால், பணயக் கைதிகளை விடுதலை செய்கிறோம்” எனத் தீவிரவாதிகள் உறுதி கூறினர். ஒரு கணம் கூட யோசிக்காத, எஸ்.ஆர்.நாதன், “அப்படியென்றால், நீங்கள் அவர்களை விட்டுவிடுங்கள். நான் உங்களுடன் குவைத் வருகிறேன்” என்றார். சொன்னது போல், பணயக் கைதியாக 13 அதிகாரிகளுடன் குவைத் சென்றார் நாதன். தீவிரவாதிகளுடன் விமானத்தில் குவைத் சென்று மறுநாள் சிங்கப்பூர் திரும்பினார். அதுவரை திக்.. திக் என்று துடித்துக்கொண்டிருந்த ஒட்டுமொத்த சிங்கப்பூரும், ஒன்றாக திரண்டு நாதனை கண்ணீருடன் வரவேற்றது.

ஒரு துளி ரத்தம் கூட சிந்தாமல், தன் உயிரைப் பணயம் வைத்து நாட்டு மக்களை காத்தவர் எனும் புகழ் நாதனுக்கு கிடைத்தது. சிங்கப்பூர் மக்களிடையே நாதனின் செல்வாக்கு உயர்ந்தது. பலரும் நன்றியுடன் அவரை வணங்கினர். இதன் பிறகு, 90-களில், மலேசியத் தூதர், அமெரிக்கத் தூதர் உள்ளிட்ட பல ராஜாங்க பதவிகளை வகித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் ஆறாவது அதிபராக, 1999-ம் ஆண்டு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2005-ம் ஆண்டும் போட்டியின்றித் தேர்வானார். இந்த காலகட்டத்தில் சிங்கப்பூரின் வளர்ச்சியின் நாதனின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. மூன்றாவது முறையாக, அதிபர் வாய்ப்பு கிடைத்தபோது, மெல்லிய புன்னகையுடன் அதை மறுத்துவிட்டார். பிறகு, உடல்நலக் கோளாறுகள் அடிக்கடி அவரை வதைத்தது.

22 ஆகஸ்ட் 2016 அன்று, மருத்துவமனையில் எஸ்.ஆர்.நாதன் காலமானார். ஒரு குமாஸ்தாவின் மகனாக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த எஸ்.ஆர்.நாதனின் வாழ்க்கை வரலாறு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். சிங்கப்பூரில், அதிபராக இருந்த தமிழர் ஒருவர், நாட்டு மக்களுக்காக, பல தீரச் செயல்களைச் செய்துள்ளார் என எஸ்.ஆர்.நாதனின் புகழ் வரலாற்றில் ஓங்கி ஒலிக்கும்.

இன்று அவரின் நினைவுநாள்!

 

*This article owned by our exclusive editor. Permission required for reproduction.