தாய் வீட்டில் நுழைந்த அனுபவத்தை தரும் “சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில்” – சிங்கப்பூர் தமிழர்களுக்கே தெரியாத வரலாறு!

சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில் சைனா டவுன் என்னும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலையில் அமைந்துள்ளது. இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான இந்து கோயிலாகும்.

மகா மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களில் இருந்து வந்த தமிழ் மக்களின் உறுதுணையோடு 1827 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மாரியம்மனை முதற் தெய்வமாகவும், மூலஸ்தான தெய்வமாகவும் அமைத்துள்ளனர்.

இக்கோயில் உருவாகவும், தோற்றம் பெற்று அமைவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் நாராயண பிள்ளை என்பவர். கோவில் அமைப்பதற்கான நிலத்தை வழங்க கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக 1822 ஆம் ஆண்டில் முன் வந்தது. 1823 ஆம் இப்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடமான சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது.

1827 ஆம் கோவிலின் அடித்தளப்பணி ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் நாட்டின் கடலூரைச் சேர்ந்த ஒருவர் தம்முடன் எடுத்து வந்த அம்மன் சிலையை மரப்பலகை, கூரையுடன் கூடிய சிறு குடில் அமைத்து சின்ன அம்மன் என்ற பெயரில் பிரஷ்டை செய்து வழிபாடு தொடங்கப்பட்டது. அந்த அம்மனே இன்று மகா மாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருக்கிறது.

16 ஆண்டுகளுக்குப் பின் சிறு அளவிலிருந்த கோயில் 1862-ல் முழுமையான செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. தற்போதுள்ள மூலவரான பெரிய அம்மன் எப்போது கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை.

அதன்பின் சுமார் 100 ஆண்டுகள் மாற்றமின்றி இருந்த ஆலயம்,1962–ல் இப்போதுள்ள நிலையில் மாற்றம் கண்டது. புதுப்பொலிவுடன் நவீன வசதிகளுடன் திருமண மண்டபம், அரங்கம் போன்றவையும் கட்டப்பட்டன. சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தினால் இவ்வாலயம் தற்போது நிர்வகிக்கப்படுகிறது.

ஜூன் 1936-ல் தான் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் 1949, 1977, 1984, 1996 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்குகள் நடைபெற்றன.