இந்தியாவின் 75- வது சுதந்திர தினம்- அதிபர் ஹலிமா வாழ்த்து!

Photo: President Of Singapore Official Facebook Page

 

இந்தியாவின் 75- வது சுதந்திர தினம் இன்று (15/08/2021) நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகளின் தலைவர்களும் இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் மூலம் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், “சிங்கப்பூர் மக்கள் சார்பில், இந்திய மக்களுக்கும், அரசுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட சவால்கள் இருந்த போதிலும், சிங்கப்பூர் மற்றும் இந்தியா தொடர்ந்து பரஸ்பர ஆதரவின் மூலம் இன்னும் நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளன. எங்கள் இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்பு, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் உள்ளிட்ட பகுதிகளில் வலுவான அடிப்படைகளால் ஆதரிக்கப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளில் சிங்கப்பூர் தொடர்ந்து நம்பிக்கையுடன் உள்ளது. ஆண்டுதோறும் சிங்கப்பூருடன் ஆக அதிகமாக வெளிநாட்டு நேரடி முதலீடு செய்யும் நாடாக இந்தியா தொடர்ந்து உள்ளது. ஃபின்டெக், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதுமை ஆகிய துறைகளில் எங்கள் இரு நாடுகளும் அதிக ஒத்துழைப்பைப் பின்பற்றுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

சாங்கி விமான நிலையத்தில் சரக்குகளை கையாளுவதற்காக தானியக்க இழுவை வாகனம்!

மேலும், “ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்கும் பொறுப்பை சிங்கப்பூர் இம்மாதம் ஏற்றுக் கொண்டதைச் சுட்டிக்காட்டிய அதிபர் ஹலிமா, சிங்கப்பூர் பிராந்தியத்தில் இந்தியாவின் ஈடுபாட்டை ஆழப்படுத்தவும் மற்றும் ஆசியான்- இந்தியா மூலோபாயத்தை வலுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார். எங்கள் இரு நாடுகளுக்கிடையேயான பரந்த அளவிலான ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டு, தொற்றுநோயிலிருந்து நாம் வெளிவரும்போது சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையேயான உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்.” இவ்வாறு அதிபர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.