அங் மோ கியோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

 

நேற்று (07/07/2021) அதிகாலை 12.25 AM மணிக்கு சிங்கப்பூரில் உள்ள பிளாக் 314 அங் மோ கியோ அவென்யூ 3- ல் (Block 314 Ang Mo Kio Ave 3) அடுக்குமாடி குடியிருப்பில் 10- வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் அறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனிநபர் மொபிலிட்டி எய்ட் ஸ்கூட்டரில் (Personal Mobility Aid Scooter- ‘PMA’) ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அறை முழுவதும் பரவியது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வாளிகளில் தண்ணீரை நிரப்பி வீட்டின் ஜன்னல்கள், நுழைவு வாயிலில் தண்ணீரைத் தெளித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து தீக்கரையானது.

 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் தீயணைப்பு வீரர்கள் (Singapore Civil Defence Force- ‘SCDF’), சுவாச கருவிச் செட்டை அணிந்துக் கொண்டு, தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர். பின்னர், அங்கு தீ விபத்தில் சிக்கிக் கொண்ட இருவரை பத்திரமாக மீட்டனர். இதில் ஒருவர் வீட்டின் நுழைவு வாயிலிலும், மற்றொருவர் கழிப்பறையில் இருந்தும் மீட்கப்பட்டனர்.

 

அதைத் தொடர்ந்து, ஒருவர் சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்கும் (Tan Tock Seng Hospital), மற்றொருவர் கே.கே.பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கும் (KK Women’s and Children’s Hospital) ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

அதேபோல், 12- வது மாடியில் குடியிருப்பாளர் ஒருவர் புகையை சுவாசித்ததால், உடல்நலம் பாதித்த அவரை தீயணைப்பு வீரர்கள் டான் டோக் செங் மருத்துவமனையின் தீ காயங்களுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு (Tan Tock Seng Hospital for Smoke Inhalation) அனுப்பி வைத்தனர்.

 

இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 குடியிருப்பாளர்களை காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் பத்திரமாக வெளியேற்றினர்.

 

இந்த தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தனிநபர் மொபிலிட்டி எய்ட் ஸ்கூட்டரில் (PMA scooter) ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்து காரணம் என்பது தெரிய வந்தது.