அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- காவல்துறை அதிகாரி உள்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

 

இன்று (29/06/2021) காலை 08.30 மணியளவில் சிங்கப்பூரில் உள்ள யிஷுன் ரிங் சாலையில் பிளாக் 141 (Blk 141 Yishun Ring Road) அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தகவல் கிடைத்தது. இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களுடன் காவல்துறையினரும் அங்கு விரைந்தனர்.

 

அடுக்குமாடி குடியிருப்பில் 3, 4, 5 மாடிகளில் உள்ள அறைகளுக்கு தீ மளமளவென பரவியது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்களில் ஒரு குழுவினர் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள ஜன்னல்களில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த தீயைத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், மற்றொரு குழுவினர் சுவாசக் கருவியை (Breathing Apparatus Sets) அணிந்துக் கொண்டு தீ விபத்து ஏற்பட்ட அறைகளுக்குள் சென்றும் தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் அறைகளில் இருந்தப் பொருட்கள் முழுவதும் எரிந்து தீக்கரையானது.

 

தீ விபத்தால் சூழ்ந்த புகை, வீடுகளின் மற்றப் பகுதிகளுக்கும் பரவி சேதம் ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

தீ விபத்து நடந்த அடுக்குமாடியில் இரண்டாவது தளம் முதல் பத்தாவது தளம் வரை வசிக்கும் குடியிருப்பாளர்கள் சுமார் 100 பேர், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் வருவதற்கு முன்பாக தாமாகவே வெளியேறினர்.

 

இந்த தீ விபத்தில் புகையைச் சுவாசித்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 10 பேர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital For Smoke Inhalation) அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.

 

இதனிடையே, ஆஃப் டூட்டியில் இருந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஐந்து பணியாளர்கள் (Five off-duty SCDF Personnel) மருத்துவ மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.