மியான்மரில் நிலவும் சூழல் குறித்து குரல் எழுப்பிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

 

ஆசியான்- சீனா உரையாடல் உறவுகளின் 30 வது ஆண்டு நிறைவையொட்டி, சிறப்பு ஆசியான்- சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் (SPECIAL ASEAN- CHINA FOREIGN MINISTER’S MEETING IN CELEBRATION OF THE 30TH ANNIVERSARY OF DIALOGUE RELATIONS) நேற்று (07/06/2021) நடைபெற்றது. சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

 

இந்த கூட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல், கொரோனா தடுப்பூசிகள், பொது சுகாதாரம், பொருளாதாரத்தை மேம்படுத்துவது, டிஜிட்டல் மயமாக்கல், ஸ்மார்ட் நகரங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.

 

குறிப்பாக, மியான்மரில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் இது குறித்து சிறப்பு கூட்டத்தில் பேசிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், “மியான்மர் மக்களால் மட்டுமே அந்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். ஆசியான் தேசிய நல்லிணக்கத்தை அடைய மத்தியஸ்தம் செய்ய உதவவும் தயாராக உள்ளது. மியான்மரில் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். மியான்மரில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

 

முன்னதாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு நாட்டு உறவுகள் குறித்தும், கொரோனா பெருந்தோற்று உள்ளிட்டவைக் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றன.