வேலையிட பாகுபாடு, தொல்லைக்கு எதிராக வலுவான சட்டங்கள் வேண்டும் – அரசாங்கத்திடம் கோரிக்கை

அவேர் எனும் மாதர் செயலாக சங்கம், வேலையிடத்தில் பாகுபாடு, தொல்லை ஆகியவை தொடர்பான சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பணி இடங்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும், இது போன்ற அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உயர்கல்வி நிலையங்களில் நன்னடத்தை விதிமுறைகள் நடப்புக்கு வரவேண்டும் என்றும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை எழுப்பியுள்ளது.

சிங்கப்பூர் அரசாங்க கொள்கைகளில் ஏற்பட வேண்டிய மாற்றம் குறித்து 191 பேரிடம் கணக்கெடுப்பு மேற்கொண்ட பிறகே இதனை அந்த அமைப்பு வெளியிட்டது.

இந்தாண்டு மார்ச் முதல் மே மாதம் வரை கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஒற்றை பெற்றோர், வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், வேலையிடத்தில் பாகுபாட்டுக்கு ஆளானவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துரையாடல்களில் பங்குபெற்றனர்.

பாலின சமநிலையை மேன்படுத்துவது குறித்து அரசாங்கம் இவ்வாண்டு வெள்ளை அறிக்கையை வெளியிடும். பின்னர் அது தொடர்பான கலந்துரையாடலை அவேர் அமைப்பு மேற்க்கொள்ளும். இது தொடர்பான பல்வேறு பரிந்துரைகளை அரசாந்தத்திடம் இம்மாதம் சமர்பிக்கப்போவதாக அமைப்பு தெரிவித்தது.

வேலையிடத்தில் அச்சுறுத்தல் நிகழும் பட்சத்தில் டாஃபெப் எனப்படும் நடுநிலையான வேலை வாய்ப்பு நடைமுறைகள் மீதான முத்தரப்பு வழிகாட்டுதல்கள், சர்ச்சைகளை கையாளுவதற்கான முத்தரப்பு கூட்டணி (TADM ) ஆகியவை எடுக்க முடியும் நடவடிக்கைகள் பற்றி தெளிக்கவுபடுத்த அவற்றின் இணையதளங்களில் தேவையான தகவல்கள் இருக்க வேண்டும் என அமைப்பு பரிந்துரைத்தது.

மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்குத் திரும்பும் தாய்மாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களை கட்டாயம் வகுக்கப்பட வேண்டும்.

உயர்கல்வி நிலைய வளாகங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகளை கையாள மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இதுபற்றி நன்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என மாணவர்கள், அமைப்பிடம் பரிந்துரைத்தனர்.

மேலும், வீடு வாங்குவதற்கு திருமணமான பெற்றோருக்கு இருக்கும் அதே நடைமுறைகளும், மானியங்களும் ஒற்றை பெற்றோருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜீவனாம்சம் தொகை முறையாக வழங்கப்பட வேண்டும் எனவும் அமைப்பு பரிந்துரைத்தது.