பேருந்து முனையத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து- 14 பேர் காயம்!

Photo: Member Of Parliament Murali Pillai

நேற்று (11/07/2021) மாலை 05.00 மணியளவில் சிங்கப்பூரில் உள்ள புக்கிட் பாத்தோக் பேருந்து முனையத்தில் (Bukit Batok Bus Interchange) இருந்து ஒரு பேருந்து இருந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

மற்றொரு பேருந்து முனையத்திற்குள் நுழைந்துக் கொண்டிருந்தது. அப்போது, இரண்டு பேருந்துகளும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அதில் ஒரு பேருந்து தடையைத் தாண்டிச் சென்று ஒரு பக்கமாகக் கவிழ்ந்தது.

இந்த பேருந்து விபத்தில் 14 பேர் காயமடைந்தனர். இதில் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். இருப்பினும், உயிருக்கு ஆபத்து நேரும் அளவுக்கு யாரும் காயமடையவில்லை. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் (Singapore Civil Defence Force- ‘SCDF’) காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான இரண்டு பேருந்துகளும் 945 சேவை எண் கொண்டவை என்றும், டவர் போக்குவரத்து நிறுவனத்தால் (Tower Transit Singapore) இயக்கப்படும் பேருந்துகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.