இனவாதப் பேச்சு: பெண்ணுக்கு நான்கு வார சிறைத்தண்டனை!

PHOTO: iStock

 

கடந்த ஆண்டு செப்டம்பர் 3- ஆம் தேதி அன்று காலை 09.30 மணியளவில் சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச் சாவடியில் 182 என்ற எண் கொண்ட பேருந்தில் 33 வயதுடைய பெண் ஒருவர் ஏறினார். பின்னர், இருக்கையில் அமர்ந்து காதில் ஒலிச்சாதனத்தைப் பொருத்திக் கொண்டு பாடல்களை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அதே பேருந்தில் பயணம் செய்திக் கொண்டிருந்த சித்தி ஆயிஷா ஜாஃபர் (Siti Ai’sha Jaffar) (வயது 40) என்ற பெண், 33 வயதுடைய பெண்ணை ‘முட்டாள் இந்தியர்’ என்று வசைபாடி இனவாத ரீதியில் அவமதித்து, அவரை அவதூறாக பேசியுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட அந்த பெண் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். அதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டர் (Singapore Discovery Centre) அருகே பேருந்தை நிறுத்தினர். பின்னர் சித்தி ஆயிஷா ஜாஃபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

இந்த வழக்கு நேற்று (23/06/2021) மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி டான் ஜென் த்சே முன்பு விசாரணைக்கு வந்தபோது, சம்பவம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட இரண்டு காணொளிகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, நீதிபதி பார்ப்பதற்காக இரண்டு காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டது. அதன்படி, 15 விநாடிகள் கொண்ட முதல் காணொளியில் “உங்கள் இதயமும் கருப்பு… எல்லாம் கருப்பு” என்று கூறியுள்ளார். அதேபோல், 4 நிமிடங்கள் 21 விநாடிகள் கொண்ட மற்றொரு காணொளியில் “முட்டாள் இந்தியர்கள்… நீங்கள் ஒரு இந்தியர், மிகவும் கருப்பு… நான் உங்கள் தோலை வெறுக்கிறேன்… உங்கள் முகம் எனக்கு பிடிக்கவில்லை” என்று சித்தி ஆயிஷா ஜாஃபர் பேசியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் சைகை செய்ததும், கூச்சலிடுவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

 

குற்றம் நிரூபணமானதால் சித்தி ஆயிஷா ஜாஃபருக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.