‘கான்பரா கிரசெண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து’- ஒருவர் உயிரிழப்பு!

'கான்பரா கிரசெண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து'- ஒருவர் உயிரிழப்பு!
Photo: Minister Ong Ye Kung

 

சிங்கப்பூரில் உள்ள செம்பவாங் வட்டாரத்தில் அமைந்துள்ள கான்பரா கிரசெண்ட்டில் (Canberra Crescent) உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான புளோக் 131சி (Block 131C) அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (பிப்.24) மதியம் 12.45 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களை ரோட்டில் வைத்து தாக்கும் ஆடவர் – வெளியான வீடியோ: தகவல் கேட்கும் அமைப்பு

இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (Singapore Civil Defence Force) தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஈசூன் தீயணைப்பு நிலையத் தீயணைப்பு வீரர்கள் (Yishun Fire Station), அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து புகை வந்ததைப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து, மூன்றாவது மாடிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு நுழைந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீ யை அணைத்தனர்.

வீட்டின் படுக்கையறையில் தீ விபத்து ஏற்பட்டதும், அங்கு இருந்த நபர் தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் கல்லறைகளில் “பேய்கள் எச்சரிக்கை” பலகை – உண்மை என்ன?

இதனிடையே, அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாம், நான்காம் தளத்தில் இருந்து சுமார் 30 பேரை வெளியேற்றியதாக காவல்துறையினரும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த மூன்று பேருக்கு புகையை சுவாசித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital) அனுப்பி வைக்கப்பட்டார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.