உலகளவில் தாய்லாந்தின் நடவடிக்கைக்கு வலுத்துவரும் எதிர்ப்பு -வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு எச்சரிக்கை

cannabis consuming rules breach in singapore thailand remove ban for cannabis

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா மற்றும் சணல் செடிகளை தாய்லாந்து நீக்கியது.இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (CNB) கஞ்சாவை எந்த வடிவத்திலும் உபயோகிக்கக் கூடாது என்று வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு நினைவூட்டியுள்ளது.

தாய்லாந்தில் தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசியா,ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்கள் கஞ்சா மற்றும் அது தொடர்பான பொருள்களை கொண்டு வந்துவிட வேண்டாம் என்று தங்கள் நாட்டினருக்கு அறிவுறுத்தியுள்ளன.

சிங்கப்பூர் போன்று பல்வேறு நாடுகளிலும் இன்னும் கஞ்சா சட்டவிரோதமானது.தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தர குடியிருப்பாளர்களும் சிங்கப்பூருக்கு வெளியே பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர் என்று (CNB) கூறியது.சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

சமீபகாலமாக கஞ்சா மருத்துவ பலனை உள்ளடக்கிய மென்மையான போதைப்பொருள் என்ற கருத்து பரவி வருகிறது.இதனை மறுத்த (CNB) ,மனிதனின் மனநிலையை பாதிக்கும் அளவிற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் கஞ்சா என்பதை நினைவூட்டியது.

கஞ்சா வைத்திருப்பது,கஞ்சா செடி வளர்ப்பது போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடையை ஜூன் 9-ஆம் தேதி தாய்லாந்து நீக்கியது.இதற்கு உலகளவில் எதிர்ப்பு வலுத்து வருகின்றது.சிங்கப்பூரில் போதைப்பொருள் புழக்கக் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் $20000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.