உலகின் முதல் கேமரா வடிவில் காரை வடிவமைத்த திருச்சி இளைஞர்!

Photo: Video Crap

உலகின் முதல் கேமரா வடிவ காரை திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உருவாக்கி அசத்தியுள்ளார்.

தமிழகத்தில் திருச்சி மாவட்டம், தீரன் நகரைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளரான தமிழினியன் என்பவரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர். சிங்கப்பூரில் உள்ள விண்டேஜ் கேமரா அருங்காட்சியகத்தினர், தங்கள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நூற்றாண்டு பழமையான இரட்டை லென்ஸ் பெல்லோஸ் மரக் கேமரா போன்ற வடிவத்தில் கார் ஒன்றைத் தயாரித்து தரும்படி, இவரை அணுகியுள்ளனர். இதையடுத்து, அதற்கான பணியில் இறங்கிய தமிழினியன், கேமரா காரின் மாதிரி வடிவத்தை அருங்காட்சியகத்தினரிடம் காண்பித்துள்ளார். மாதிரி வடிவம் அவர்களை மிகவும் கவர்ந்து விடவே, காட்சிப்படுத்தும் விதத்தில் நிறுத்தி வைப்பதற்கு மட்டுமல்லாமல், பெட்ரோல் மூலம் இயக்குவதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கத் திட்டமிட்டிருந்தார்.

புருனேக்கு 100,000 டோஸ் மோடர்னா தடுப்பூசியை வழங்கிய சிங்கப்பூர்!

அதன்படி, உள்ளூரைச் சேர்ந்த 30 பணியாளர்களுடன் இணைந்து கேமரா காரை உருவாக்க முழு வீச்சில் இறங்கிய தமிழினியன், எட்டு மாத உழைப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் உலகின் முதல் கேமரா காரை உருவாக்கியுள்ளார்.

உலக புகைப்பட தினம் நேற்று முன்தினம் (19/08/2021) கொண்டாடப்பட்ட நிலையில், தனது நிறுவனத்தின் முன்னாள் நிறுத்தப்பட்டிருந்த காரின் முன் பக்க கண்ணாடி கேமரா லென்ஸ் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்டேஜ் கேமராக்களைக் கொண்டுள்ள சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் தமிழகத்தின் திருச்சியில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் கேமரா கார் இடம் பெறவிருப்பதால் மகிழ்ச்சியில் திளைக்கிறார் தமிழினியன்.