பூனையின் நினைவிடத்தில் பூக்கள் வைத்து அஞ்சலி செலுத்திய சிங்கப்பூரர்கள்! – அகால மரணமடைந்த பூனை!

சிங்கப்பூரின் பூன் லே அவென்யூவில் மாடியிலிருந்து வீசப்பட்ட பாந்தர் பூனை அகால மரணமடைந்ததை அடுத்து அங்கு அதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக நினைவிடத்திற்கு சிங்கப்பூர் முழுவதும் உள்ள பூனைப் பிரியர்கள் குவிந்துள்ளனர்.
குடியிருப்பில் வசித்த பத்து வயது சிறுவனால் தூக்கி வீசப்பட்ட பூனை உயிரிழந்தது.பூனைக்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பூங்கொத்துகள்,மலர்வளையம்,பூனையின் சிறு படுக்கை மற்றும் அதன் விருப்ப உணவு வைக்கப்பட்டிருப்பதை TikTok பயனர் ஒருவர் காணொளியாக பகிர்ந்துள்ளார்.
மேலும்,பூனைப் பிரியர்களுக்கான முகநூல் பக்கத்தில் நினைவிடத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.தற்காலிக நினைவிடத்தில் சிறிய பொம்மை வீடு வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
பரிதாபமாக உயிரிழந்த பூனைக்கு 12க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியதை காண முடிந்தது.நினைவிடத்தில் மலர்கள் வைத்து இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஒரு சிறிய பிரார்த்தனை செய்த பிறகு அவர்கள் வெளியேறினர்.
சமூக வலைதளத்தில் பதிவேற்றிய பின்னர் வர்ணனையாளர்கள் இரங்கல் தெரிவித்தனர்.பூனைக்கு நீதி கேட்டு 60,000க்கும் மேற்பட்ட இணையவாசிகள் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.