அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை- 1.18 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்!

Photo: Central Narcotics Bureau

 

கடந்த ஜூன் 30- ஆம் தேதி அன்று காலை சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (Central Narcotics Bureau- ‘CNB’) அதிகாரிகள் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, துவாஸ் சவுத் (Tuas South), ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 (Jurong East Ave 1) போன்ற இடங்களில் அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையில் போதைப்பொருள்கள் சிக்கியது.

 

போதைப்பொருள் கடத்தியதாக, சிங்கப்பூரைச் சேர்ந்த 33 மற்றும் 50 வயதுடைய இரண்டு ஆண்கள், மலேசியாவைச் சேர்ந்த 24 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்கள் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டன.

 

அவர்களிடம் இருந்து மொத்தம் சுமார் 7,959 கிராம் ஹெராயின், 2,159 கிராம் ஐஸ், 423 கிராம் கஞ்சா, 202 கிராம் கெட்டமைன், சுமார் 1,451 எக்ஸ்டஸி மாத்திரைகள், சுமார் 300 எரிமின்- 5 மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

மேலும், 1,000 சிங்கப்பூர் டாலர் ரொக்கத்தையும், போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சிவப்பு நிற மெர்சிடிஸ் காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு 1.18 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.