சிங்கப்பூர் வேலை ஆதரவுத் திட்டத்தில் மோசடி! குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை என்ன?

சிங்கப்பூரில் கொரோனா சூழலில் பாதிக்கப்பட்டதாக ஏமாற்றி COVID-19 ஆதரவு மானியம், தற்காலிக நிவாரண நிதி ஆகியவற்றை முறைகேடாக பெற முயன்றதாக
மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஏமாற்றியதாகவோ அல்லது ஏமாற்ற முயன்றதாகவோ நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றத்திற்கும் 10 ஆண்டுவரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், வேலை ஆதரவுத் திட்டத்தில் மோசடி செய்ததாக 11 பேர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அவர்களில் இருவர் போலியான பெயர்களைப் பயன்படுத்தி, அரசு தரப்பில் வழங்கப்படும் 50,000 வெள்ளி நிதியை பெற முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

நிதி உதவி பெறும்  அளவுக்கு அந்த ஊழியர்கள் எந்தவிதமான குறிப்பிடப்பட்ட வேலையும் செய்யவில்லை. அதற்கேற்ப சம்பளத்தைப் பெறவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது தவிர, 15,000 வெள்ளி நிதியாதரவைப் பெற முயன்றதாக மேலும் இருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

வேலை ஒப்பந்தங்களிலும் சம்பள ஆவணங்களிலும் போலித் தகவலைச் சமர்ப்பித்ததாக  9 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.