வயதானத் தாயைக் காணவிரும்புவதாகக் கூறிய கைதி! – சீனாவில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்த கதை!

Photo: Singapore Immigration & Checkpoints Authority

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பதினைந்து ஆண்டுகள் வரை தங்கியிருந்த சீனாவைச் சேர்ந்த யான் ஜின்பாவுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.58 வயதான அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஒரு வருட சிறைத் தண்டனையும் 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

குடிவரவுச் சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன.2006ஆம் ஆண்டு முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக சீனாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்த யான் அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

அதற்காக அவருக்கு 5 பிரம்படிகளும் 3 மாதச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.பின்னர்,சீனாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.மேலும் குடிவரவுத் துறை அதிகாரிகளின் அனுமதியின்றி சிங்கப்பூருக்குள் நுழைய யானுக்கு தடை விதிக்கப்பட்டது.ஆனால்,அடுத்து 2007ஆம் ஆண்டிலேயே சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வேலைபார்க்க யான் முடிவெடுத்தார்.

நேரடியாக சிங்கப்பூருக்குள் நுழைய முடியாததால் மலேசியாவிற்கு வந்தார்.சில நாட்கள் கழித்து நண்பரின் உதவியுடன் விசைப் படகில் சிங்கப்பூரை வந்தடைந்தார்.கிடைக்கும் வேலைகளை செய்து வந்த யான், குடிவரவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது பிடிபட்டார்.

பின்னர்,தனது குற்றச்செயலுக்கு வருந்துவதாகக் கூறிய யான்,சீனாவில் வசிக்கும் தனது 98 வயதான தாயைக் காண விரும்புவதாகக் கூறியுள்ளார்.சோதனைச் சாவடிகளில் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணையம் தெரிவித்தது.