இந்தியாவின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நிதி திரட்டிய சிங்கப்பூர் அமைப்பு!

Photo: High Commission Of India In Singapore Official Facebook Page

 

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு அமெரிக்கா, ரஷ்யா, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மருத்துவ திரவ ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விமானங்கள் மூலம் அனுப்பி உதவி வருகின்றன. மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக இந்தியாவிற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அதேபோல், முன்னணி தொழில் நிறுவனங்களும் இந்திய அரசு நிதியுதவியை அளித்து வருகின்றன.

அந்த வகையில், சிங்கப்பூரில் “நான் இந்தியாவுக்காக சுவாசிக்கிறேன்” (I Breathe For India) என்ற பெயரில் காணொளி காட்சி மூலம் நிகழ்ச்சி நடைபெற்றது. டிஐஇ சிங்கப்பூர் (TiE Singapore) மற்றும் ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் (IIT Alumni Association) இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பி.குமரன் கலந்துக் கொண்டார். அதேபோல், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.

 

இந்தியாவில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதியுதவி அளித்து உதவிடும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் சுமார் ரூபாய் 3 கோடிக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டது. இது உண்மையில் பாராட்டத்தக்க முயற்சியாகும். இந்த நிதி இந்திய மக்களுக்கு பெரிதும் உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.