“கொரோனா காரணமாக டோக்கியோவுக்கு செல்லப்போவதில்லை”- அதிபர் ஹலிமா யாக்கோப் அறிவிப்பு!

Photo: Singapore President Halimah Yacob

 

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23- ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை காண சுமார் 10,000 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜப்பான் அரசு தீவிரமாக செய்து வருகிறது.

 

இந்த நிலையில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் (Tokyo2020 Olympic Games) பங்கேற்கத் தகுதிப் பெற்றுள்ள சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கலாசார, சமூக, இளைஞர் துறை அமைச்சர் எட்வின் டோங் உடனிருந்தார்.

 

இது குறித்து சிங்கப்பூர் அதிபர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், “எங்கள் அணி சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் மற்றும் பாராலிம்பியன்கள் உட்பட விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி அட்டவணைகள் முதல் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகள் வரை கவனம் செலுத்தியுள்ளனர். சிங்கப்பூருக்கு பெருமை சேர்க்கும் வகையில் விடாமுயற்சியுடன் தொடர்ந்து கடுமையான பயிற்சிகளை எடுத்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.

 

சிங்கப்பூர் அணியை ஆதரிப்பதற்காக இம்மாதம் இறுதியில் டோக்கியோ செல்ல விரும்பினேன். ஆனால், தற்போது அமலில் உள்ள கொரோனா பயண கட்டுப்பாடுகள் எனக்கு சவாலாக அமைந்துள்ளதால் அங்கு செல்லப் போவதில்லை. இதனால் சிங்கப்பூர் அணியின் விளையாட்டு வீரர்களை நேரில் ஆதரிக்க முடியவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள சிங்கப்பூர் அணியின் விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பாகப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.