கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் அதிரடி சலுகைகள்!

Photo: Shake Shack Singapore

 

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சிங்கப்பூர் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்திய அரசு, கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இதன் பயனாக தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

 

இந்த நிலையில், சிங்கப்பூரில் நாளுக்கு நாள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், ஒரு சிலர் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வரும் நிலையில், அனைவரும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

 

அதேபோல், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சிறப்பு கட்டணச் சலுகைகளை வழங்கி, கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்தி வருகின்றன.

 

அந்த வகையில், சிங்கப்பூரில் ஜியாக் சுவான் ரோட்டிலுள்ள (Jiak Chuan) ஒரு கடையில் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு ஒரு காப்பி இலவசம். ஒரு முறை தடுப்பூசிப் போட்டுக் கொண்டிருந்தாலும் கூட இந்தச் சலுகை உண்டு. அடுத்த மாதம் நடுப்பகுதி வரை, இந்த சலுகை நீடிக்கும் என கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அடுத்த மாதத்தில் இருந்து ‘Shake Shack’ உணவகத்தில் பர்கர் வாங்கும் போது, பொரித்த உருளைக்கிழங்கு கீற்றுகள் (Frence Fries) இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள தடுப்பூசி நிலையத்திற்கு சென்று வருவதற்கான கட்டணம் 15 சிங்கப்பூர் டாலருக்குள் இருக்கும் பட்சத்தில், அதை இலவசமாக வழங்குகிறது ‘Gojek’ நிறுவனம்.

 

இதன் மூலம் சிங்கப்பூரில் 100% தடுப்பூசி செலுத்திக் கொண்டோம் என்ற இலக்கை மிக விரைவில் அடைய முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.