“தடுப்பூசிகள் நம்மை எந்த அளவிற்கு நோயில் இருந்து பாதுகாக்கிறது?”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் விளக்கம்!

Photo: Prime Minister Of Singapore Lee Hsien Loong Official Facebook Page

 

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது. இருப்பினும், வைரஸை ஒழிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன.

 

அந்த வகையில் நமக்கு முதல் ஆயுதமாகக் கிடைத்துள்ளது கொரோனா தடுப்பூசி. ஒவ்வொரு வரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், தொற்று நோயிலிருந்து நாமும் பாதுகாத்துக் கொள்ளலாம்; மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற கருத்தை மருத்துவ நிபுணர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றன.

 

இதனால் இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பலவேறு நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும், கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தி விளையாட்டு பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டிய மக்களும், தற்போது கொரோனா தடுப்பூசி நிலையங்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிக் குறித்து சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தார்.

 

மூத்தோர் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது முக்கியம் என்று ஏன் சொல்லப்படுகிறது?

வயதானவர்கள் இடையே தான் இன்னும் அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதால் நமது உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கு இது ரொம்ப அவசியம். அதேநேரத்தில், அது நமக்கு மட்டும் பாதுகாப்பு தருவது மட்டுமில்லாமல், மற்றவர்கள், நமது குடும்பத்தினர், சமுதாயத்தில் உள்ள அனைவருக்குமே அந்த பாதுகாப்பு அது தருகிறது.

 

இது வரைக்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பயந்த மூத்தோர், தற்போது அந்த பயம் நீங்கி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள நினைத்தால் அவங்க ரொம்ப நாள் காத்திருக்க வேண்டுமா?

நிச்சயமாகக் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இப்போது ஒரு மூத்தோர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விரும்பினால், அந்த கொரோனா தடுப்பூசி போடும் நிலையங்களுக்கு சென்று, அவர்கள் அங்கேயே அந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் முன்பதிவு செய்துக்கொள்ள அவசியம் இல்லை.

 

தடுப்பூசிகள் நம்மை எந்த அளவிற்கு நோயில் இருந்து பாதுகாக்கிறது? ஏனென்றால் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் ஒரு சிலருக்கு நோய் தொற்று இருக்கிறது!

நாம் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது அறிவியல், மருத்துவ ஆதாரம் என்ன காட்டுகிறது என்றால், தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதால், அந்த நோய் நமக்கு வரும் வாய்ப்பைக் குறைக்கிறது. தடுப்பூசிக்கு அப்பாற்பட்டு நாம் பாதித்தால் கூட, அந்த பாதிப்பு சிறிய அளவுக்குத்தான் நமக்கு ஏற்படும் என்பதைத் தடுப்பூசி உறுதிச் செய்கிறது.

 

தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டால் நமக்கு பக்கவாதமோ இல்லை மாரடைப்போ வரும் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள், அது உண்மையா?

அதற்கு எந்தளவுக்கும் மருத்துவ ஆதாரம் இல்லை. இது போன்ற கேள்வி இருந்தால் மருத்துவர்களை அணுகி விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.

 

மூத்தோர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பயப்படாமல் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் அது உங்களுக்கும் சரி, உங்கள் குடும்பத்திற்கும் சரி, நமது சமுதாயத்தினருக்கும் சரி நல்ல பயனளிக்கும். கோவிட் 19 கிருமியிடம் இருந்து அது நல்ல பாதுகாப்பை வழங்கும். நாம் அனைவரும் இணைந்து இந்த முயற்சியில் செயல்பட்டால் நிச்சயமாக இந்த சவாலிலும் மீண்டு நாம் தொடர்ந்து முன்னேறுவோம்.

இவ்வாறு சிங்கப்பூரின் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளியை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், “நீங்கள் தடுப்பூசிப் போட்டுக் கொண்டு விட்டீர்களா? உங்களுக்கு இன்னும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அமைச்சர் ஈஸ்வரன் கூறுவதைக் கேளுங்கள். உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்திட தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.